தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக பிரமுகர் கொலை; திமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4 பேர் கைது! பரபரப்பு வாக்குமூலம்.. - VELLORE BJP MAN MURDER

வேலூரில் பாஜக பிரமுகரை திமுக ஊராட்சி மன்ற தலைவர் மூளையாக செயல்பட்டு கொலை செய்துள்ள சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலையான விட்டல் குமார், திமுக ஊ.ம. தலைவர் பாலா சேட் உள்ளிட்ட 4 பேர்
கொலையான விட்டல் குமார், திமுக ஊ.ம. தலைவர் பாலா சேட் உள்ளிட்ட 4 பேர் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 10 hours ago

வேலூர்: வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அடுத்த நாகல் கிராமத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் விட்டல் குமார் கடந்த 16 ஆம் தேதி மாலை சென்னாங்குப்பம் பகுதியில் சாலையோரம் ரத்த காயத்துடன் இருந்துள்ளார். தகவல் அறிந்து சென்று அவரது உறவினர்கள் விட்டல் குமாரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாஜக பிரமுகர் கொலை

விட்டல் குமாரை தலையில் தாக்கப்பட்டதால் அவர் உயிரிழந்தார் என அவரது உறவினர்களும், பாஜகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, சந்தேக மரணம் என கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், உடல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

உடல் அடக்கம்

இந்நிலையில், விட்டல் குமார் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், திமுக பிரமுகரான நாகல் ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் என்பவர் தான் கொலைக்கான காரணம் என விட்டல் குமார் உறவினர்களும், பாஜகவினர் உடலை வாங்க மறுத்து, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனை முடிந்து பின் உடலை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின் சுமார் 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாவட்ட எஸ்பி மதிவாணனிடம் நடத்திய பேச்சு வார்த்தையில், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி உறுதி அளித்ததற்கு பிறகு விட்டல் குமார் உடலை வாங்கிச் சென்று அடக்கம் செய்தனர்.

இதனிடையே சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என செய்தியாளர்கள் சந்திப்பிலும் மற்றும் அறிக்கையும் வெளியிட்டு இருந்தார்.

இருவர் சரண்

மேலும், சந்தேக மரணம் என்ற பிரிவை கொலை வழக்காக கே.வி.குப்பம் காவல்துறையினர் மாற்றினர். இதனைத் தொடர்ந்து கே.வி. குப்பம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், விட்டல்குமார் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, இரண்டு மர்ம நபர்கள் அவரை நோட்டமிட்டு பின் தொடர்ந்து வந்ததை அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட வந்தனர்.

தொடர்ந்து கொலை வழக்கு தொடர்பாக சந்தோஷ் குமார் (26 ), கமல் தாசன் (24) ஆகிய இருவர் கடந்த 20 ஆம் தேதி அன்று காட்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த கொலை வழக்கில் நாகல் கிராமத்தைச் சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் (55) என்பவரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பாலா சேட் மற்றும் தரணி குமார் (28) ஆகிய இருவர் காட்பாடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் இருவரையும் ஜனவரி 2 ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி ஜெயகணேஷ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இருவரையும் பலத்த பாதுகாப்புடன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.

கொலையாளிகள் வாக்குமூலம்

முன்னதாக, நீதிமன்றத்தில் சரணடைந்த சந்தோஷ் குமார், கமல் தாசன் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் விட்டல் குமாரை கொலை செய்தால், உங்கள் இருவருக்கும் தொகுப்பு வீடு கட்டித் தருவதாகவும், நான் திமுக ஊராட்சி மன்ற தலைவர் என்பதால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறி பணம், மது மற்றும் கஞ்சா வாங்கி கொடுத்ததாகவும் கொலை செய்தவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

மேலும், இதனால் இருவரும் விட்டல் குமாரை கொலை செய்துவிட்டு பாலாசேட்டுவிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். அதன்பின் அவர்களுக்கு 7,500 ரூபாய் பணம் கொடுத்து, இருவரையும் தலைமறைவாக இருக்கும்படி ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் கூறியுள்ளார். அந்த பணத்தை வைத்துக்கொண்டு சித்தூர் மற்றும் பெங்களூர் பகுதிகளில் இருந்து விட்டு, போலீஸ் தன்னை தேடுவதை அறிந்து இருவரும் காட்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்ததாக தெரிவித்தனர்.

ஒருவர் தலைமறைவு

மேலும், பாலா சேட்டுவின் மகன் வழக்கறிஞர் ராஜேஷ் குமார் தலைமறைவாக உள்ள நிலையில் அவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாஜக பிரமுகரை திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரின் மகன் உள்ளிட்ட 5 பேர் திட்டம் தீட்டி கொலை செய்துள்ள சம்பவம் கே.வி. குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details