சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே, சுனில் என்ற வட மாநில இளைஞர் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களது எதிரே, போதையில் வந்த 4 இளைஞர்கள் சுனில் மற்றும் அவரது நண்பரை வழிமறித்து, ஹெட்செட் மற்றும் செல்போனை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், அவரைத் தடுக்க முயன்ற சுனிலை, போதையில் இருந்த இளைஞர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுனில், அருகில் உள்ள தொழிற்சாலைக்குள் ஓடி உள்ளார். ஆனால், அவரை விடாது விரட்டிச் சென்ற இளைஞர்கள், சுனிலின் வயிற்றில் கத்தியால் லேசாக கிழித்துள்ளனர். சுனிலின் அலறல் சத்தத்தைக் கேட்டு தொழிற்சாலையில் பணிபுரியும் நபர்களை ஓடிவந்து பார்த்துள்ளனர். இதனையடுத்து, அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். மேலும், வயிற்றில் ரத்தக் கசிவுடன் இருந்த சுனில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.