சென்னை: மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான வரையறைகளை தளர்த்தி மக்கள் தொகை மற்றும் ஆண்டு வருமானத்தை பொருட்படுத்தாமல் திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதற்கான சட்ட முன்வடிவு சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகம் நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள் தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தொகை 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோயில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று, அந்நகரங்களையும், அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள விரைந்து நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய நான்கு நகராட்சிகளையும் மாநகராட்சியாக உயர்த்துவதற்கான வரையறையை மக்கள் தொகை மற்றும் வருமான அளவுகோல் தடையாக இருப்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சிக்கான வரையறைகளை தளர்த்தி மக்கள் தொகை மற்றும் ஆண்டு வருமானத்தை பொருட்படுத்தாமல், நான்கு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்டமுன்வடிவு இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி, நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி என மொத்தம் 4 புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்கிறார்.
இதன்மூலம் புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய மாநகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள், பாதாளச் சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதோடு, இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலாப் பயணிகள், வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இந்த சட்டமுன்வடிவு நாளை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படவுள்ளது.
இதையும் படிங்க:“நீட் தேர்வில் எவ்வித குளறுபடியும் இல்லை” - பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கருத்து!