தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அந்தோணியார் கோயில் பகுதியில் உள்ள சாலையில் வசித்து வருபவர், வேலூரைச் சேர்ந்த சந்தியா என்ற கணவனால் கைவிடப்பட்ட இளம்பெண். இவர் கடந்த மார்ச் 9ஆம் தேதி அதிகாலை, தனது 4 மாத பெண் குழந்தையுடன் சாலையின் ஓரத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது, மர்ம நபர் ஒருவர் 4 மாத பெண் குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளார்.
இதனை அடுத்து சந்தியா, தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில், காவல்துறையினர் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து, கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வந்தனர். மேலும், குழந்தை கடத்தல் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 17) காவல்துறையினர் சார்பில் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் குறித்த புகைப்படத்தை வெளியிட்டு, தகவல் தெரிவிப்பவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் தெருவைச் சேர்ந்த நாகப்பன் மகன் சாமி என்ற கருப்பசாமி (47) என்பவரை, நேற்று முன்தினம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றம் சாட்டப்பட்ட நபரான ஆலங்குளம் கரும்பனூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்ற ராஜா (53) என்பவரையும் நேற்று (மார்ச் 18) கைது செய்தனர்.
இதனை அடுத்து, அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியதாகக் கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக தென் மண்டல ஐஜி கண்ணன், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.