தேனி:திருவள்ளூர் மாவட்டம், வெங்கத்தூர் கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள பாலாஜி நகரில் வசித்து வருகிறார். மேலும், போடிநாயக்கனூர் அருகே சிலமலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட சிலமலை சேட்காடு என்ற இடத்தில் அவருக்குச் சொந்தமான நிலத்தில், அரசின் அனுமதி பெற்று 2021ஆம் ஆண்டு முதல் கல்குவாரி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், போடி அருகே முத்தையன்செட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த மதன் என்பவர், கடந்த ஆகஸ்ட் மாதம் புருஷோத்தமனை செல்போன் மூலமாக அழைத்து, தன்னை ஒரு ரவுடி என அறிமுகப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், தனக்கு பணம் தர வேண்டும் என மிரட்டியதாகவும், அதனைப் பெரிய விசயமாக புருஷோத்தமன் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
கல்குவாரி ஓனருக்கு மிரட்டல் விடுக்கும் ஆடியோ (Credits- ETV Bharat Tamil Nadu) இந்த நிலையில், நேற்று முன்தினம் (அக்.24) புருஷோத்தமனின் கல்குவாரியில் இருந்து உடை கற்களை ஏற்றிக் கொண்டு 2 டிப்பர் லாரிகளில், சிலமலை கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்த போது, மதன் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் லாரிகளை வழிமறித்து, அதன் ஓட்டுநர்களை ஒருமையில் திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்குவாரி உரிமையாளர் புருஷோத்தமன் மற்றும் மேலாளர் மணி ஆகியோரையும், ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, பணம் பறிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தஞ்சை பீச்சோரம் கிடந்த பை.. அதிர்ந்த போலீசார்.. ரூ.2 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல்!
அதையடுத்து, பாதிக்கப்பட்ட புருஷோத்தமன் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முத்தையன் செட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த மதன், பிரதீப், அருண் குமார், விஜி ஆகிய 4 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய பிரதீஷ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, மதன் கல்குவாரி உரிமையாளரை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், "இங்கு அனைத்து ஏரியாவிலும் உள்ள குவாரிகளிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணுவார்கள். நீங்களும் எதாவது பண்ணுங்கள். இதுகுறித்து யாரிடம் வேண்டுமானாலும் விசாரித்துக் கொள்ளுங்கள். நம்ம ஒன்லி ரவுடிசம் தான், கட்சியிலலாம் இல்ல என்றுள்ளார். அதற்கு புருஷோத்தமன் ஐயாவிடம் கேட்டுவிட்டி லைனில் வருகிறேன் என்றுள்ளார். அப்போது, நீங்கள் கேட்டுட்டு லையனில் வாங்க, நாங்க கேட்காமல் லையனில் வருகிறோம்" என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள மதன் என்பவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், தற்போது கல்குவாரி உரிமையாளரை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்