மதுரை:மதுரை மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கூட்டம் அதன் தலைவர் சூரிய கலா கலாநிதி தலைமையில் நேற்று (வியாழன்கிழமை) நடைபெற்றது. இதில், துணைத் தலைவர் செல்லம்பட்டி முத்துராமன் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தற்போது நீதியரசர் சந்துரு ஒரு நபர் அறிக்கையின் கருத்துருக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையில், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில், இது தொடர்பான முக்கிய விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இணைக்கக் கூடாது என்ற கருத்துருவை வலியுறுத்தி பார்வர்ட் பிளாக் கவுன்சிலர் காசி கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து அனைத்து கட்சி கவுன்சிலர்கள், தீர்மானத்தின் நகலை மாவட்ட ஊராட்சி தலைவர் சூரிய கலா கலாநிதியிடம் அளித்தனர்.
கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் கள்ளர் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிட நல பள்ளிகள், இந்து அறநிலையத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் ஆகிய பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி K.சந்துருவின் (One Man Committee) அறிக்கையை தமிழக அரசு நிராகரித்து வழக்கம் போல் மேற்படி பள்ளிகள், அந்தந்த பெயரில் செயல்படும் என தமிழக அரசு அறிக்கையின் வாயிலாக அறிவிப்பு ஆணை வெளியிட வேண்டும் என்ற தீர்மானம் முன்மொழியப்பட்டது.
இதனடிப்படையில், பல்வேறு தரப்பட்ட மாணவ மாணவியர்களின் எதிர்கால நலன் கருதி, மேற்படி சிறப்பு தீர்மானத்திற்கு, மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் அனைத்து மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களும், முழு ஆதரவு தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகளின் பெயர் மாற்றம் - நீதிபதி சந்துரு குழு பரிந்துரை!