சென்னை:சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் 20வது ஆண்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், முன்னாள் ஆளுநருமான சதாசிவம், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடம் உரையாற்றிய முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “ தேசிய கல்விக் கொள்கையில் தாய் மொழியில் படிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நாம் முதலில் தாய்மொழி, இரண்டாவது சகோதர மொழி, கடைசியாக பிற மொழி என மொழியை கற்க வேண்டும். நான் இந்தி திணிப்பிற்கு எதிரானவன். தமிழர்கள் கடமையுணர்ச்சியுடன், கடுமையான உழைப்பாளிகளாக உள்ளனர்.
சிறந்த குடிமைப் பணி அதிகாரிகள் தமிழகத்தில் இருந்து தான் உருவாகியுள்ளனர். நான் தமிழ் நாட்டில் நின்று கொண்டுதான் சொல்கிறேன் இந்தி படியுங்கள். குழந்தைகளுக்கு இந்தி கற்க உதவுங்கள் அப்போது தான் அவர்கள் தேசிய அளவில் போட்டி போட்டு, தங்களது திறமை வளர்த்து கொள்ள முடியும்.
எனது இளம் பருவத்தில் நானும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். எனது ஊர் நெல்லூர் அங்கு இந்தி எதிர்ப்பு போரட்டம் நடக்கும் அப்போது இந்தி சொற்கள் எழுதப்பட்ட ரயில் நிலையத்திலும், தபால் நிலையத்திலும் தார் பூசி அழிப்பேன். பிற்காலத்தில் பாஜக தேசிய தலைவர் பதவியில் அமர்ந்த பிற்குதான் இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அறிந்தேன்.