தூத்துக்குடி:திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில் கடந்த மே.4 தேதி திசையன்விளை அருகே உள்ள தோட்டத்தில் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து உவரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் மேற்பார்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பு கடந்த 30ஆம் தேதியிட்ட கடிதம் ஒன்று வெளியாகியது.
அதில், மரண வாக்குமூலம் எனக் குறிப்பிட்டு, நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன், முன்னாள் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு உட்பட ஆறு பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு தனக்கு ஏதாவது நேரிட்டால் இவர்கள் தான் காரணம் என எழுதியிருந்தார்.
மேலும், கடந்த 27ஆம் தேதி ஜெயக்குமார் தனது மருமகன் ஜெபாவுக்கு எழுதிய மற்றொரு கடிதமும் வெளியானது. அதில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பல்வேறு விஷயங்களை ஜெயக்குமார் எழுதியிருந்தார். அதில், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் பெயரைக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு உட்பட 30 பேருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. இந்தநிலையில், விசாரணையில் ஆஜராவதற்காக கே.வி. தங்கபாலு இன்று தூத்துக்குடி வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறும் போது, "காவல்துறை அழைப்பானை அனுப்பி இருக்கின்றார்கள். அது சம்பந்தமாக அவர்களைச் சந்திப்பதற்காக வந்துள்ளேன். இன்னும், ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்குள் காவல்துறை அதிகாரிகளை உரிய முறையில் சந்திக்கவுள்ளேன்.