ஈரோடு: முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டம்பாளையம் பகுதியில் நேற்று (ஜன. 20) பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி தலைமையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர் தகராறு செய்த நிலையில், அவரை சுட்டிக்காட்டி குடிப்பழக்கம் இல்லாத போது 25 ஆண்டுகளுக்கு முன் குடிப்பழகத்தை ஏற்படுத்தியது திமுக என்றும் அதனால் இவர் இப்படி செய்கிறார் என்றார்.
அரசியலில் தன்னடக்கம் மிகவும் முக்கியம். அப்போதுதான் அரசியலில் நீடிக்க முடியும். பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி எளிமையானவர், உட்கார சொன்னால் கூட உட்கார மாட்டார் என்று சுட்டிக்காட்டி செங்கோட்டையன் பேசினார். முன்னதாக பவானிசாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி பேசுகையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை புகழ்ந்து மூன்று நிமிட நேரம் கவிதை வாசித்தார்.
அதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன இதுவரை ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை வாங்கித் தந்ததாகவும், கட்சி மாறும் தலைவர்கள் மத்தியில் இதுவரை கட்சி மாறாத ஒரே தலைவர் எனவும் புகழ்ந்து கவிதை வாசித்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் சிஎன்.மாரப்பன், வி.ஏ.பழனிச்சாமி, சிவராஜ், நாச்சிமுத்து, அவைத்தலைவர் நாராயணன், தொப்பம்பாளையம் ஊராட்சி தலைவர் மகேஷ்வரி நாகேந்திரன், நல்லூர் ஊராட்சித் தலைவர் மூர்த்தி, பவானிசாகர் பேரூராட்சி செயலாளர் கே.செல்வன், எம்ஜிஆர் மன்ற ஒன்றிய துணைச் செயலாளர் எம்.ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:“முற்றிலும் திட்டமிட்ட வதந்தி” - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு விளக்கம்