தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கவரைப்பேட்டை ரயில் விபத்து சதியா? விரைவில் வெளியாகும் விசாரணை அறிக்கை! - TRAIN ACCIDENT

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பான வழக்கில் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கை இன்னும் வரவில்லை. அந்த அறிக்கையின் முடிவில் தான் விபத்திற்கான காரணம் தெரியவரும் என ரயில்வே காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து -கோப்புப்படம்
பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து -கோப்புப்படம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2024, 8:25 PM IST

சென்னை:திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் கடந்த 11 ஆம் தேதி இரவு சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே காவல்துறையினர், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக லோகோ பைலட், தொழில்நுட்பப் பிரிவு, சிக்னல் பிரிவு, தண்டவாள பராமரிப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், ரயில் மெயின் லைனுக்கு பதிலாக லூப் லைனில் மாறிச் சென்றதால், ஏற்கனவே அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டு, ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கவனக்குறைவாக செயல்படுதல், உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுதல், காயங்கள் மற்றும் கடுமையான காயங்கள் ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது தண்டவாளத்தின் போல்ட், நட்டுகள் கழட்டப்பட்டுள்ளதால் இது சதிச் செயல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில், இந்திய ரயில்வே பாதுகாப்புச் சட்டத்தின் 150 வது பிரிவின் கீழும் (ரயிலை சேதப்படுத்துதல் அல்லது தகர்க்க முயற்சித்தல்) ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:மீண்டும் துவங்கிய ஊட்டி மலை ரயில் சேவை! இதயத்தை வருடும் இயற்கை காட்சிகள்!

அறிக்கை வெளியாகவில்லை:இதுகுறித்து ரயில்வே காவல்துறை உயர் அதிகாரி ஈடிவி பாரத்திடம் பேசும்போது,"கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பான ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கை இன்னும் வரவில்லை. அந்த அறிக்கையின் முடிவில் தான் இந்த விபத்திற்கான காரணம் தொழில்நுட்ப கோளாறா? அல்லது மனித தவறா என்பது தெளிவாகத் தெரியவரும்.

இந்த விபத்து தொடர்பாக ஏற்கனவே நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குகள் போடப்பட்டுள்ளன. தற்போது இந்திய ரயில்வே பாதுகாப்புச் சட்டத்தின் 150 ஆவது பிரிவு கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

கவாச் தொழில்நுட்பம் :ஓய்வுபெற்ற ரயில்வே நிலைய கண்காணிப்பாளர் மனோகரன் கூறுகையில், "சிக்னல் பாயின்ட்டுடன் (signal point) இன்டெர்லாக்கிங் (interlocking) ஒருங்கிணைந்து இணைப்பில் இருக்கும். தண்டவாளத்தின் போல்ட் நட்டுகள் கழற்றப்பட்டிருந்தால் சிக்னல் சிவப்பிற்கு மாறி இருக்க வேண்டும்.

ரயில் ஹோம் சிக்னலை கடந்த பிறகு இடைப்பட்ட நேரத்தில் (Point) பாயின்ட் வருவதற்குள் சதி செயல் நடந்திருக்கலாம். ஆனால் 2 நிமிடங்களில் அவற்றை செய்ய முடியுமா என்பது சந்தேகமே. பாயின்ட்டில் ( Point) சதி செயல் நடந்திருந்தால் இன்டெர்லாக்கிங் கட் (Interlocking cut) ஆகி சிக்னல் சிவப்பில் மாறி இருக்கும்.

அனைத்து ரயில் வழித்தடங்களிலும் சிசிடிவி கேமராக்களை அமைப்பது சாத்தியமில்லாதது. இன்னும் அனைத்து ரயில் நிலையங்களிலும், ரயில்களிலுமே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதுபோன்ற ரயில் விபத்துகளை தடுப்பதற்கு உள்கட்டமைப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக கவாச் (Kavach) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தை இந்திய ரயில்களில் கொண்டு வருவதன் மூலம் விபத்துகளைத் தடுக்கலாம். இப்போது நாம் பயன்படுத்துவது மேனுவல் (manual) சிஸ்டம். ஆனால் கவாச் சிஸ்டமே ரயில் இயக்கத்தை கட்டுப்படுத்தும்.

ரயில் தண்டவாளத்தில் ஏதாவது பொருள் இருந்தாலும், எதிரே வேறு ஒரு ரயில் வந்தாலும் லோகோ பைலட் கவனிக்கவில்லை என்றால் இந்த தொழில்நுட்பமே பிரேக் அப்ளை செய்து, வேகத்தை கட்டுப்படுத்தும். இது விபத்திற்கான சாத்தியத்தை குறைக்கும். எனவே கவாச் தொழில்நுட்பதை பயன்படுத்த வேண்டும்" என்று மனோகரன் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details