மதுரை:தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர் டாக்டர் செந்தில்குமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு என் தலைமையில் 7 உறுப்பினர்கள் கொண்ட அமைப்பு 2018ஆம் ஆண்டில் தேர்தலை சந்தித்தோம். சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மருத்துவர்கள் கலந்து கொண்டு, உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமனால் நடத்தப்பட்ட தேர்தலில் பெருமளவில் வெற்றி பெற்று 2023ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சிறப்பாக செயல்பட்டு வந்தது.
கடந்த 2023ஆம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், வேட்பாளர்கள் சிலர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சட்டத்தை தற்போதைய சூழ்நிலைக்கேற்ப திருத்தியப் பின், தேர்தல் நடத்தலாம் என்றுக்கூறி உயர் நீதிமன்றம் தேர்தலுக்கு தடை விதித்தது. தலைமை வழக்கறிஞர் கொடுத்த உறுதியின் பேரில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சட்டம் மூன்று மாத காலத்திற்குள் திருத்தப்பட வேண்டும் என்றும், அதுவரை டாக்டர் செந்தில் தலைமையில் உள்ள நிர்வாகிகள் தொடரலாம் என்றும், செய்யப்படும் சட்ட திருத்தத்தினை தற்போது இருக்கும் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து கொண்டு வரும்படியும் நீதிமன்றம் ஆணை வழங்கியது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஒரு அரசாணையை வெளியிட்டது. அதன் மூலம் எனது தலைமையில் நடந்து வந்த நிர்வாகத்தினை நீக்கிவிட்டு சுகாதாரத்துறை செயலர் தலைமையில் ஆறு நபர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. முறையாக தேர்தல் மூலம் வெற்றி பெற்று கவுன்சிலை நிர்வாகித்து வந்த நிர்வாகிகளை நீதிமன்ற ஆணை இருந்தும் நீக்கிவிட்டு, ஜனநாயக விரோத போக்காக அதிகாரிகளை கொண்டு கவுன்சிலை நடத்துவது முறையற்றது என்று நானும் என்னுடன் நிர்வாகிகளாக இருந்த ஆறு உறுப்பினர்களும் அப்போதிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.