தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக்கொள்ளை தான்” - ப.சிதம்பரம் பதிலடி! - P CHIDAMBARAM

ஆளுநர் ஆர்.என்.ரவியின் மொழிக்கொள்கை கருத்துக்கு பதிலளித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழகத்தில் எப்போதும் இரு மொழி திட்டம் தான், இதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

ப சிதம்பரம், ஆளுநர் ரவி
ப சிதம்பரம், ஆளுநர் ரவி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2024, 1:09 PM IST

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை தான் என்பதை ஆளுநர் ஆர்.என். ரவி புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு மக்களிடம், என்ன எண்ணங்கள் என்ன சிந்தனைகள் இருக்கின்றனவோ அவற்றுக்கு நேர்மாறாக கருத்துகளை கூறுவது தான் ஆளுநர். மற்ற மாநிலங்களிலே மூன்று மொழிகள் இருக்கின்றன என்பது தவறு.

ஆங்கிலம் தெரியாது: இந்தி பேசும் பல மாநிலங்களில் மாணவர்கள், இளைஞர்களுக்கு ஒரு மொழி மட்டுமே தெரியும். மும்மொழி திட்டம் என்று கூறுவீர்கள். ஆனால் அங்கு ஒரு மொழி திட்டம் தான். அங்கு ஆங்கிலம் கற்றுத் தருவது கிடையாது. ஆங்கில ஆசிரியர்களும் கிடையாது. ஆங்கில புத்தகங்களும் கிடையாது. அந்த மாணவர்களுக்கு ஒரு சொற்றொடரைக் கூட ஆங்கிலத்தில் எழுதத் தெரியாது, பேசத் தெரியாது.

ப சிதம்பரம் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

விரும்பி படிப்பவர்களுக்கு தடை இல்லை:தமிழ்நாட்டில் பல ஆண்டு காலமாக இரு மொழி கொள்ளையை எந்த அரசு வந்தாலும் அந்த அரசு அதைக் கடைப்பிடிக்கிறது. அதற்காக விரும்பியவர்கள் இந்தி படிக்கக் கூடாது என கூறவில்லை. தமிழகத்தில் தனியார் பள்ளிகள், CBSC பள்ளி, கேந்திர வித்யாலயாவிலும் இந்தியை கற்று கொடுக்கிறார்கள். இந்தியை விரும்பி, படிக்கக் கூடிய மாணவர்களுக்கு எந்த தடையும் கிடையாது.

தமிழகத்தில் மக்களுடையே எண்ணம், அரசின் கொள்கை இரு மொழிக்கொள்கை தான் என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “இந்தியாவின் 28 மாநிலங்களில் 27 மாநிலங்களில் மும்மொழித் திட்டம் பின்பற்றப்படுவதாக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருக்கிறார். அவர் கற்பனை உலகத்தில் இருக்கிறார் என்று பணிவுடன் சொல்ல விரும்புகிறேன்.

இதையும் படிங்க:தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாக தெரிந்த ஆளுநர் விழா மேடையில் கண்டிக்காதது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்வி

ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை: பல இந்தி பேசும் மாநிலங்களில், குறிப்பாக பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட் பல அரசுப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை. ஆங்கில வகுப்புகளை நடத்துவதில்லை, அப்படி நடந்தாலும் வகுப்புகளில் மொழிப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. பல்லாயிரம் ஆங்கிலம் கற்ற மாணாக்கர்கள் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் பேச அல்லது எழுத இயலாதவர்கள் என்பதை நான் நேரடியாக அறிவேன்.

ஒரு மொழித் திட்டம்:அங்கு மும்மொழித் திட்டம் செயல்பாட்டில் இல்லை. ஆழமாகப் பார்த்தால், அங்கு 'ஒரு மொழித் திட்டம்' தான் செயல்படுத்தப்படுகிறது. இரண்டாவது மொழி என்ற பெயரில் இந்தி மொழிக்கு நெருங்கிய தொடர்புள்ள சமஸ்கிருதம், பஞ்சாபி, போஜ்புரி போன்ற மொழிகள் ஒப்புக்காக கற்பிக்கப்படுகிறது. தென் மாநில மொழிகள் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை 95 சதவீதப் பள்ளிகளில் கற்றுத்தரப்படுவதில்லை. அதற்கான ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை என்பதே உண்மை.

தமிழகத்தில் இந்தி:தமிழ் நாட்டில் மாநில அரசுப் பள்ளிகளைத் தவிர தனியார் பள்ளிகள், CBSE, ICSE பள்ளிகள் மற்றும் மத்திய அரசு நடத்தும் கேந்தரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது என்பது எல்லோரும் அறிந்த செய்தி. தமிழ்நாட்டில் இந்தி மொழியைக் கற்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு எந்தத் தடையும் கிடையாது. தட்சிண பாரத இந்தி பிரசார சபையின் பல நிலைத் தேர்வுகளை ஆண்டு தோறும் தமிழ்நாட்டில் பல்லாயிரம் மாணவர்கள் எழுதி தேர்ச்சி பெறுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த செய்தி

ஆளுநர் ஆர்.என். ரவி உண்மைச் செய்திகளின் அடிப்படையில் அரசின் கொள்கை பற்றி விவாதிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சென்னையில் உள்ள டிடி தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதக் கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியாவில் தமிழ்நாடு தவிர்த்து மற்ற 27 மாநிலங்களிலும், அம்மாநில தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் ஒன்று என மும்மொழிக்கொள்கை பின்பற்றப்படுவதாகவும், தமிழ்நாடு அதனை புறக்கணித்து மற்ற மாநிலங்களுடன் தொடர்பு கொள்வதை விரும்புவதில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details