திண்டுக்கல்:ஒற்றைத் தலைமை விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் முறையிட்டு வந்தார். இந்நிலையில் அவர் கட்சி பெயர், சின்னம், கொடி பயன்படுத்த நீதிமன்றம் தடைவிதித்த நிலையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற கூட்டத்தை, திண்டுக்கல், கரூர், திருவாரூரில் நடத்தினார்.
அதில், திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-யை நீக்குவதற்கு முன் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அதிமுகவில் நடந்த விவகாரங்கள் குறித்துப் பேசினார். சட்டமன்ற தேர்தல் சமயத்தில் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேசிய காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதிமுக உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “முதலமைச்சராக இருந்து தற்போது எதிர்க்கட்சியாக வந்த வரை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி எந்த தேர்தலிலாவது வெற்றி பெற்றதா? ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி, நகர்ப்புற, மாநகராட்சி தேர்தல்களில் தோல்வி, பேரூராட்சிகளில் தோல்வி, நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட்டோம் 38 இடங்களில் தோல்வி. ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் 5, 6 லட்சம் வாக்குகள் வித்தியாசம் மட்டும். ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு தேனி, அந்த தேனியில் தான் ஜெயித்தோம்.
நான் இந்த உண்மையைச் சொல்லியே ஆக வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் அமித்ஷா சென்னை வந்து என்னையும், எடப்பாடி பழனிசாமியையும் அழைத்துப் பேசினார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக பிரிந்து இருந்ததினால், உங்களுடைய வாக்குகள் எல்லாம் பிரிந்து ஒரு தொகுதி தவிர்த்து எல்லா தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவி இருக்கின்றது. ஆகவே அமமுக டிடிவி தினகரன், சின்னம்மா, ஓபிஎஸ் எல்லாம் இணைந்து போட்டியிட்டால் நாம் உறுதியாகத் தேர்தலை எதிர்கொள்ள முடியும் எனச் சொன்னார்.
இவர் அதெல்லாம் முடியாது! சின்னம்மாவையும் சேர்க்க முடியாது, டிடிவியையும் சேர்க்க முடியாது என்றார். பாஜகவிற்கு ஒதுக்குகின்ற தொகுதியில் ஒரு 20 தொகுதியைச் சேர்த்துக் கொடுங்கள் நான் அவர்களிடம் பேசுகிறேன், நீங்கள் பேச வேண்டாம் என்றார். அதையும் தரமுடியாது என்றார். 15 தொகுதி தரலாமா என்றார், அதையும் தரமுடியாது என்றார். 12 தொகுதியாவது அவர்களுக்குக் கொடுக்கலாமா என்றார், அதையும் தரமுடியாது என்றார். 10 தொகுதியாவது கொடுக்க முடியுமா எனக் கேட்டார், அதையும் தர முடியாது என்றார்.