ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பவானிசாகர், புளியம்பட்டி, சத்தியமங்கலம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக சார்பில் நேற்று (பிப்.24) முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. அத்துடன் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல் மற்றும் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;
அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா மூன்று தொகுதிகளிலும் எழுச்சியாக நடைபெற்று வருகிறது. எம்ஜிஆர் காட்டிய வழியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஏழைகளுக்காகவே வாழ்ந்தார். அவர்களுக்கான திட்டங்களை வகுத்தார். 20 கிலோ இலவச அரிசி வழங்கினார். விலையில்லா சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட 14 சலுகைகளை வழங்கியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் தான் சுயநிதி கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. இதன் காரணமாக மாணவர்கள் படித்து பல்வேறு வெளிநாடுகளில் பணியாற்றி வருகிற நல்ல வாய்ப்பை உருவாக்கி தந்தார். நமது கட்சியின் பொதுச்செயலாளர் (எடப்பாடி பழனிசாமி) அதே பணிகளை ஆற்றி வருகிறார்'' என தெரிவித்தார்.