தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாகன் உயிரிழப்பால் உணவு உண்ண மறுக்கும் திருச்செந்தூர் தெய்வானை யானை! - THIRUCHENDUR TEMPLE ELEPHANT

திருச்செந்தூர் தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம், தொடர்பாக வன அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த பாகன், கூண்டில் உள்ள தெய்வானை யானை
உயிரிழந்த பாகன், கூண்டில் உள்ள தெய்வானை யானை (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2024, 9:26 AM IST

தூத்துக்குடி: திருச்செந்தூர் தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து, தூத்துக்குடி, திருச்செந்தூர் வன அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விரிவான விசாரணக்கு பிறகே முழுவிபரம் தெரியவரும் என தகவல் தெரிவித்துள்ளனர். தன் பாகன் உயிரிழந்துள்ளதால், சம்பவத்திற்கு பிறகு தற்போது வரை தெய்வானை யானை உணவு எடுத்துக்கொள்ள மறுப்பதாக வன அலுவலகர்கள் தெரிவித்துள்ளனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்குகிறது. இந்த கோயிலுக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தெய்வானை என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. அசாமில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த யானைக்கு தற்போது 25 வயதாகிறது.

தெய்வானை யானை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதும், பக்தர்கள் யானைக்கு உணவளிப்பதும் வழக்கம். இந்த யானை தங்குவதற்காக ராஜகோபுரம் பகுதியில் குடில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களாக யானையின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு, பக்தர்கள் யானைக்கு நேரடியாக உணவு வழங்குவதை தவிர்த்து, குடிலில் சிறிய அளவிலான வலைகள் அமைக்கப்பட்டு, பாகன் மூலமாக மட்டுமே உணவு வழங்கப்பட்டு வந்துள்ளது.

இந்த யானைக்கு தலைமை பாகனாக ராதாகிருஷ்ணன் (57), பாகன்களாக அவரது உறவினர்கள் செந்தில்குமார் (47) மற்றும் உதயகுமார் (46) ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். வழக்கம் போல் நேற்று (நவ.18) பிற்பகலில் ராதாகிருஷ்ணன் யானைக்கு உணவு அளித்துவிட்டு, மதிய உணவிற்காக வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், யானைக்கு பழம் கொடுப்பதற்காக பாகன் உதயகுமாரும், அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம் பலுகலைச் சேர்ந்த சிசுபாலன் என்ற முன்னாள் ராணுவ வீரரும் குடிலுக்கு சென்றுள்ளனர்.

இதையும் படிங்க:அசாமில் இருந்து திருச்செந்தூர் வந்த யானை! பிரேரோனா தெய்வானை ஆனது எப்படி?

யானை தாக்கி இருவர் உயிரிழப்பு:முதலில் சிசுபாலன் யானைக்கு பழத்தை கொடுத்தாக கூறப்படுகிறது. அப்போது திடீரென ஆவேசமடைந்த தெய்வானை யானை, சிசுபாலனை தாக்கியுள்ளது. தொடர்ந்து, யானையை தாக்க விடாமல் தடுக்க முயற்சி செய்த பாகன் உதயகுமாரையும் தாக்கியுள்ளது. இதனையடுத்து, யானை தாக்கியவர்களை கோயில் பணியாளர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 2 பேரும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

வன அலுவலர் ஆய்வு:இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமணன் தலைமையிலான வனத்துறையினர், தெய்வானை யானையை பார்வையிட்டனர். தொடர்ந்து திருநெல்வேலி வனத்துறை மருத்துவ குழுவினரும் சம்பவ இடத்தில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும், சம்பவம் குறித்த உண்மை தகவல் அறிவதற்காக, கோயில் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து வன அலுவலர் ரேவதி ரமணன் கூறியதாவது, “திருச்செந்தூர் யானை தெய்வானை மிகவும் அமைதியானது. இப்போது அதற்கு 25 வயதாகிறது. பெண் யானைகளுக்கு மதம் பிடிக்காது. எனினும் என்ன காரணத்தால் யானை தாக்கியது என்று தெரியவில்லை. யானை மிகவும் உணர்ச்சிப்பூர்வமான மிருகம். தமக்கு நெருக்கமானவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் யானை உணவு உட்கொள்ளாது.

இதையும் படிங்க:பாகனைக் கொன்ற திருச்செந்தூர் கோயில் யானை!

அதன்படி, அசம்பாவித சம்பவத்திற்கு பிறகு தற்போது வரை தெய்வானை யானை உணவு எடுத்துக் கொள்ளவில்லை. திருச்செந்தூர் கோயிலில் இருந்து யானையை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. யானைக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும். விரிவான விசாரணக்கு பிறகே முழுவிபரம் தெரியவரும்” என்றார்.

தொடர்ந்து, திருச்செந்தூர் வனசரக அலுவலர் கவின் ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதில், “பாகனின் உறவினர் சிசுபாலன் யானை அருகே நின்று நீண்ட நேரம் செல்பி எடுத்துள்ளார். அதன் பின்னர் யானையை தொட்டுள்ளார். புதிதாக ஒரு நபர் தன்னை தொட்டதை பொறுக்காத தெய்வானை யானை சிசுபாலனை தாக்கியுள்ளது. தொடர்ந்து, அவரை காப்பாற்ற வந்த யானை பாகன் உதயகுமாரையும் தாக்கியுள்ளது. உதய குமாரை தாக்கிய பின்னர், அவர் தன்னுடைய பாகன் என்பதை புரிந்து கொண்டு, அவரை எழுப்ப முயன்றுள்ளது. ஆனால், அவர் எழுந்திராத நிலையில், ஆத்திரமடைந்த யானை சிசு பாலனை மீண்டும் கடுமையாக தாக்கியுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கோயில் வளாகத்தில் பாகன் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்ததை அடுத்து கோயில் நடை சாத்தப்பட்டு, சுமார் 45 நிமிடத்திற்கு நடை அடைக்கப்பட்டது. பரிகார பூஜைக்குப் பிறகு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details