கோயம்புத்தூர்:கோவையில் பெண் காட்டு யானை உயிரிழந்துள்ள நிலையில், அதன் குட்டியை யானைக் கூட்டத்துடன் இணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் நேற்று ஈடுபட்டு தோல்வி அடைந்துள்ளதால், இன்று இரண்டாவது நாளாக அதன் யானைக் கூட்டத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
யானைகளின் வலசை காலம் என்பதால் கேரளா வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் வரும் காட்டு யானைகள், உணவு, தண்ணீர் தேடி இரவு நேரங்களில் வனப்பகுதியை ஓட்டியுள்ள விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வருகிறது. இதில், கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தொண்டாமுத்தூர், தடாகம் மற்றும் மருதமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், கோவை தடாகம் அடுத்த வரப்பாளையம் பன்னிமடை காப்புக்காடு பகுதியில் பெண் யானை ஒன்று நேற்று (டிசம்பர் 24) செவ்வாய்க்கிழமை அமர்ந்த நிலையில் உயிரிழந்துள்ளது. இதுபற்றி தகவலறிந்து வந்த கோவை மண்டல வனப் பாதுகாவலர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் தலைமையில் உதவி வன பாதுகாவலர் விஜயகுமார் மற்றும் வனக் கால்நடை மருத்துவர்கள் சுகுமார், விஜயராகவன், வனச்சரகர்கள் திருமுருகன், சரவணன் ஆகியோர் யானை உயிரிழந்தது குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, உயிரிழந்த பெண் காட்டு யானையை அருகில் உள்ள வனப்பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய உடல் பாகங்கள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், உயிரிழந்த யானையுடன் இருந்த குட்டியை அதன் யானை கூட்டத்துடன் சேர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.