தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் உயிரிழப்புகள்.. ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்? - வனத்துறை கூறுவது என்ன? - Velliangiri Hills - VELLIANGIRI HILLS

Velliangiri Hills: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் ஈர்க்கப்படும் இளைஞர்கள் வெள்ளியங்கிரி மலையில் உயிரிழக்கும் பரிதாபம், இதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு.

Velliangiri Hills
Velliangiri Hills

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 7:43 PM IST

Velliangiri Hills

கோயம்புத்தூர்: கோவை மாநகரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது, வெள்ளியங்கிரி மலை. 5 ஆயிரத்து 833 அடி உயரமும், ஐந்தரை கிலோ மீட்டர் தூரமும் உள்ளது. வெள்ளியங்கிரி மலையின் ஏழாவது மலை உச்சியில், தோரணப்பாறை குகையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் மனோன்மணி அம்மையாருடன் அருள்பாலிக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் மே இறுதி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற வனத்துறையினர் அனுமதி அளிக்கின்றனர். இந்நிலையில், கோயில் அடிவாரத்தில் துவங்கும் பயணம், முதல் மலையான வெள்ளை விநாயகர் கோயில், இரண்டாவது மலையான பாம்பாட்டி சுனை, மூன்றாவது மலையான கைதட்டி சுனை, நான்காவது மலையான சீதைவனம், ஐந்தாவது மலையான அர்ச்சுனன் வில், ஆறாவது மலையான பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை மலைகளின் வழியாக ஏழாவது மலையான கிரி மலையை வந்தடைகிறது.

மேலும், கடல் மட்டத்திலிருந்து 5,833 அடி உயரத்தில் இக்கோயில் உள்ளதால் கோடை காலத்திலும் மிகக் கடுமையான பனிப் பொழிவு காணப்படும். மலை உச்சியிலிருந்து பார்த்தால், கோவையின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை காட்சியும், கேரள வனப்பகுதியும் ரம்மியமாக காட்சி அளிக்கும்.

அந்த வகையில், இந்த ஆண்டு முன்கூட்டியே வெள்ளியங்கிரி மலை ஏற்றம் துவங்கியுள்ளது. தற்போது இதமான சீசன் நிலவுவதால் அதனை அனுபவிக்கவும், சாமி தரிசனம் செய்யவும் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமானோர் மலை ஏறத் துவங்கியுள்ளனர். இவ்வாறு கோயிலுக்கு வரும் இளைஞர்கள் மலைகளின் இயற்கைக் காட்சிகள், அங்குள்ள நிலப்பரப்புகள் குறித்து வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், மலை ஏற்றம் துவங்கிய இரண்டு மாதத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, கோவை வீரபாண்டியைச் சார்ந்த கிரண் (22), ஆந்திராவைச் சேர்ந்த சுப்பாராவ் (68), சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தியாகராஜன் (35), வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் (23), தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் (46), சென்னையைச் சேர்ந்த ரகுராமன் (60), கோவை போத்தனூரைச் சேர்ந்த சீனிவாசன் (47), திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீர குமார் (31) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மலை ஏற்றத்திற்கு தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்கள் மட்டுமன்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

தற்போது வெயில் தாக்கத்தால் கடும் வறட்சி நிலவுவதால், கோயிலுக்கு வரும்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் எடுத்து வருமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மலை ஏற்றம் மேற்கொள்வோர் பிளாஸ்டிக் பொருட்கள், கவர்கள் கொண்டு வரக்கூடாது. இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மலை ஏற்றம் செய்யக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இது குறித்து மலை ஏற்றம் மேற்கொண்ட இளைஞர்கள் கூறுகையில், “நாங்கள் இரண்டாவது முறையாக இந்தப் பயணம் மேற்கொண்டுள்ளோம். முதல் மற்றும் ஏழாவது மலை மிகக் கடினமாக இருந்தாலும், மலை ஏறி சாமி தரிசனம் செய்யும் போது வலி அனைத்தையும் மறந்து விடுகிறோம். மலை ஏற்றத்திற்குத் தகுந்த முன்னேற்பாடுகளுடன் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் கொண்டு வந்தால், அதற்கு 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். மலையிலிருந்து கீழே வந்த பின்னர், அதனைக் காண்பித்து மீண்டும் 20 ரூபாய் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

முதல் முறையாக வருபவர்கள் சில வாரங்களுக்கு முன்னதாகவே உடற்பயிற்சி செய்து வந்தால் மலை ஏறுவதில் சிரமம் இருக்காது. இரண்டு இடங்களில் நீர் ஊற்றுகள் உள்ளதால், தண்ணீர் பிரச்னை இல்லை. தற்போது சீசன் துவங்கி உள்ளதால், அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். மலை ஏற்றம் மிகவும் கடினமாக உள்ளதால், தகுந்த முன்னேற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும். உடல் பருமன், இதயப் பாதிப்புகள் உள்ளவர்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "மலை ஏற்றம் செய்ய வருபவர்கள் தகுந்த பாதுகாப்புடன் வர வேண்டும். உடல் நலக்குறைவு மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மலை ஏற்றம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறோம்.

எனினும், அதனை பொருட்படுத்தாமல் ஒரு சிலர் நோய்ப் பாதிப்புடன் ஏறுவதால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதுவரை மூன்று மாதங்களில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சம் பேர் மலை ஏற்றம் செய்துள்ளனர். மலையில் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதால் வனத்துறை சார்பில் மூன்று இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் உயிரிழப்புகள் குறைகிறது. எனினும், நோய்த் தன்மை உள்ளவர்கள் அவர்களாகவே மலை ஏற்றம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். மேலும், மலை ஏற்றம் செய்வோர் இன்ஸ்டாகிராம், யூடியூப்களில் ரீல்ஸ் எடுத்துப் போடுவதால் அதனைப் பார்த்து ஆர்வ மிகுதியில் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளதால், பக்தர்களின் வருகை குறைய வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:பாக்., இளம் பெண்ணுக்கு இதயம் கொடுத்த இந்தியா.. சென்னை மருத்துவர்கள் நெகிழ்ச்சி செயல்! - Pakistan Girl Heart Transplant

ABOUT THE AUTHOR

...view details