கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில், கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக யானை தந்தம் கொண்டு வரப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு வன உயிரினக் குற்றப்பிரிவு தனிப்படை மற்றும் குமரி மாவட்ட வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, நாகர்கோவில் செட்டிக்குளம் அருகே உள்ள தனியார் கல்லூரி அருகில் கார் ஒன்றில் யானை தந்தம் கொண்டு வந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அங்கு வனத்துறை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை வனத்துறையினர் சோதனையிட்டுள்ளனர். அந்த காரில் 4 நபர்கள் இருந்துள்ளனர். மேலும், காரை சோதனை செய்யும் போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 யானை தந்தத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனிடையே, யானை தந்தம் கொண்டு வந்த நபர்களை கைது செய்யும் போது இரண்டு பேர் தப்பித்துள்ளனர்.
இதன்படி, நாகர்கோவிலைச் சேர்ந்த முத்து ரமேஷ் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த புதியவன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 34வது வார்டு அதிமுக வட்டச் செயலாளர் ராஜாராம் என்பவர், யானை தந்தத்தை விற்க முயன்றதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அவரோடு சேர்ந்த மார்ட்டின் என்பவர் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர், தலைமறைவாக இருக்கும் ராஜாராம், மார்ட்டின் ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது வன உயிரினச் சட்டம் 1972-இன் படி வழக்குப் பதிவு, செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மேலும், வனத்துறையால் கைப்பற்றப்பட்ட யானை தந்தம் பல லட்சம் மதிப்பு வரை விற்பனை செய்யலாம் என்றும், இந்த தந்தம் கலைப் பொருட்கள் செய்ய பயன்படுத்தலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த யானை தந்தம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, காட்டு யானை ஏதாவது கொலை செய்யப்பட்டதா, இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது, குமரி வனப்பகுதியில் வேட்டையாடப் பட்டதா அல்லது வேறு வனப் பகுதியில் வேட்டையாடப்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:திருவேற்காடு அருகே பிளம்பர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை! - Plumber Murder