கோயம்புத்தூர்: கோவை தடாகம் அருகே வரப்பாளையம் பகுதியில் தனியார் நிலத்தில் பெண் காட்டு யானை ஒன்று அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், உயிரிழந்த யானையுடன் இருந்த குட்டியை அருகில் உள்ள யானை கூட்டத்துடன் சேர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
யானை குட்டி தனியாக இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அதனை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, தாய் யானை உயிரிழந்தது தெரியவந்துள்ளது. யானை உயிரிழப்பிற்கான காரணம் குறித்து பிரேத பரிசோதனை முடிவிலேயே தெரியவரும் என்றும், வனப்பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தனியார் நிலத்தில் யானை உயிரிழந்துள்ளது என்று கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பெண் காட்டுயானை (ETV Bharat Tamil Nadu) வலசை காலம்:
நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை யானைகளின் இடபெயர்வு காலம் என்பதால் கேரள வனப்பகுதியில் இருந்து ஆனைகட்டி, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் வழியாக பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளுக்கு சென்று, அங்கிருந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தெங்கு மரஹடா, முதுமலை, பந்திப்பூர் ஆகிய பகுதிகளில் யானைகள் வலசை செல்வது வழக்கம்.
யானை நடமாட்டம்:
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஒட்டியுள்ள கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். அந்த வகையில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொண்டாமுத்தூர், தடாகம் மற்றும் மருதமலை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த யானைகள் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:600 ஆண்டுகள் பழமையான 'ஆசிரியம்' கல்வெட்டு.. மதுரை அருகே கண்டெடுப்பு!
இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 23) திங்கட்கிழமை இரவு தடாகம் மற்றும் வரப்பாளையம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்துள்ளன. இதனை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து வெளியில் வந்த நிலையில், குட்டி யானை ஒன்று தனியாக இருப்பதை பார்த்துள்ளனர்.
இதனையடுத்து, இதுகுறித்த தகவலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் ஆலோசனைப்படி, தனியாக இருந்த குட்டி யானையை வனப்பகுதியில் உள்ள கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், குட்டி யானை இருந்த இடத்திற்கு அருகில் பெண் காட்டுயானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துற்கு வந்த வனப்பணியாளர்கள், யானை உயிரிழந்ததை உறுதி செய்து, இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையிலான, உதவி வன பாதுகாவலர் விஜயகுமார் மற்றும் வனக் கால்நடை மருத்துவர் சுகுமார், கோயம்பத்தூர் வனச்சரகர் திருமுருகன் ஆகியோர் யானை உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் உடன் இருந்த குட்டியை அருகில் உள்ள யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த பெண் காட்டு யானை அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.