சென்னை: எண்ணூர் பகுதியில் கடந்த டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலின் எதிரொலியால் அதி கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் அப்பகுதியில் இயங்கி வந்த மத்திய அரசின் சி.பி.சி.எல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய எண்ணெய் கழிவுகள் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் பரவியது.
இந்த எண்ணெய் கழிவுகள் கொசஸ்தலை ஆறும், வங்கக்கடலும் சங்கமிக்கும் இடமான எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் பரவி, மீனவர் குடியிருப்பு பகுதிகளான நெட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், எண்ணூர் முகத்துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் படர்ந்து கடலில் சேர்ந்தது. இதனால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளில் எண்ணெய் கழிவுகள் படிந்து அவை பாழாயின.
மேலும், ஏராளமான மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் இறந்து தண்ணீரில் மிதந்தன. இந்த பாதிப்பு இதோடு மட்டும் நில்லாமல், அலையாத்தி காடுகள், மற்றும் வெளிநாட்டில் இருந்து வலசைக்கு வந்த பறவைகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விலங்கினங்கள் மற்றும் தாவரங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வனத்துறை ஆய்வு செய்தது.
இதனிடையே எண்ணெய் கசிவுகளால் பாதிக்கப்பட்ட பறவைகள் முகத்துவாரப் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்துவிட்டன. குறிப்பாக பத்துக்கும் மேற்பட்ட பறவைகளின் சிறகுகள் மீது எண்ணெய் படலம் படர்ந்து பறக்க முடியாமல் அவதிப்பட்டன. எண்ணூர் முகத்துவாரத்துக்கு வரும் பறவைகள் அனைத்தும் இரை தேடி வருகின்றவை ஆகும். இவையெல்லாம், வேட்டையாடி உண்ணக் கூடியவை என்பதால் அதற்கு வேகம் அவசியம்.