ஈரோடு: யானைகளில் பலவகையான யானைகள் இருந்தாலும், அவை ஆப்பிரிக்கா யானை. ஆசியா யானை என்றே இனம் பிரிக்கப்படுகின்றன. தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியத்துவம் வகிக்கும் யானைகள் சமீபமாக நோய், விபத்து உள்ளிட்ட பல காரணங்களால் உயிரிழந்து வருகின்றன. அதனால் யானைகளின் முக்கியத்துவம் குறித்தும், யானைகளை பாதுகாப்பது எப்படி என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் யானைகளின் வாழ்விடமாக உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 1,400 யானைகள் உள்ளதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பத்தில் அண்மையில் நடந்த வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தெரியவந்தது. அதாவது, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடந்த 2013ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் 4வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. சுமார் 1,455 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் குத்தியாலத்தூர் காப்புக்காடு யானைகள் இடம்பெயரும் முக்கிய வழித்தடமாக உள்ளது. சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் வனக்கோட்டங்களில் 10 வனச்சரகங்கள் உள்ளன.
குறிப்பாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தெங்குமரஹாடா ஆகிய பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வருகின்றன. அப்படி வனப்பகுதியில் உலாவும் யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி கிராமத்துக்குள் புகுந்துவிடுகின்றன. ஆனால், அண்மையில் பெய்த மழையால் வனப்பகுதி மொத்தமும் பச்சை பசேலென காட்சியளிக்கிறது. மேலும், காடுகளில் உள்ள குட்டைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது.
அதனால், யானைகளுக்கு போதுமான தீவனம் காட்டுக்குள்ளேயே கிடைப்பதால் அவை கிராமத்துக்குள் புகுவது குறைந்து வருகிறது. யானைகளால் காடுகள் காக்கப்படுவதால் மனிதர்களோடு இணைந்து வாழ பழகிக்கொண்டதாலும் யானைகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினம் என வனத்துறையினர் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.