தூத்துக்குடி: சென்னையில் உள்ள “கிளாசிக் ரன்” (CLASSIC RUN) என்ற தனியார் சுற்றுலா நிறுவனம், கடந்த 17வது வருடங்களாக வெளிநாட்டினர் பங்குபெறும் “ஆட்டோ சேலஞ்ச்” (Auto Challeng) என்ற ஆட்டோ சுற்றுலாப் பயணத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி, 2025 ஆம்ஆண்டுக்குஏற்பாடு செய்யப்பட்ட ஆட்டோ சேலஞ்ச் சுற்றுலாப் பயணம், கடந்த டிசம்பர் 28ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.
இதில், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 5 பெண்கள், 16 ஆண்கள் என மொத்தம் 21 பேர் கலந்துக் கொண்டுள்ளனர். இவர்கள் 9 அணியாகப் பிரிந்து 9 ஆட்டோக்களில் சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் பயணம் மேற்கொண்டு, நேற்று (ஜனவரி 03) வெள்ளிக்கிழமை தூத்துக்குடி வந்தடைந்தனர்.
அங்கு, உப்பளங்கள், பிரசித்திபெற்ற பனிமய அன்னை ஆலயம், முத்துநகர் கடற்கரை ஆகியவற்றைப் பார்வையிட்டுள்ளனர். தொடர்ந்து, சாயர்புரத்தில் உள்ள பிரம்ம ஜோதி பண்ணை தோட்டத்தில் பொங்கல் கொண்டாடுவதற்காகவருகை புரிந்தனர்.
விழா ஏற்பாடுகள்:
பொங்கல் கொண்டாடுவதையொட்டி, தோட்டம் முழுவதும் கரும்பு, மஞ்சள் குலை, வாழை தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாட வந்த வெளிநாட்டவர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்துகொண்டனர்.
ஆட்டோ சேலஞ்சில் ஈடுபட்டுள்ள ஆட்டோக்கள் (ETV Bharat Tamil Nadu) பொங்கல் கொண்டாட்டம்:
பொங்கல் கொண்டாட்டத்திற்கு வருகை புரிந்த 9 அணிகளுக்கும், அடுப்பு மூட்டி தனித்தனியாக பொங்கல் பானை, பச்சரிசி, நட்டுச்சர்க்கரை ஆகியவை வழங்கப்பட்டது. ஒவ்வொரு அணியும் தனித்தனியாகப் பொங்கல் வைத்தனர். இதில், பானையில் பொங்கல் பொங்கி வரும்போது, தோட்டத்தில் பணிபுரிபவர்கள் செய்துகாட்ட, “பொங்கலோ பொங்கல்” என கோஷமிட்டு வெளிநாட்டவர் குலவை சத்தமும் எழுப்பி அசத்தினர்.
பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டவர்கள் (ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை.. தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பு..!
பொங்கல் வைத்து முடிக்கப்பட்டதும், அந்தந்த அணியினர் அவர்கள் வைத்த பொங்கலை வரிசையாகத் தட்டில் வைத்துள்ளனர். வெளிநாட்டினர் வைத்த பொங்கலைச் சுவைத்துப் பார்த்த நடுவர்கள் முதல் மூன்று அணியைத் தேர்வு செய்துள்ளனர். முதல் பரிசாக செவ்வாழை, இரண்டாம் பரிசாக மலைத்தேன், மூன்றாம் பரிசாக பச்சை வாழைக் குலைகள் வழங்கப்பட்டன.
பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டவர்கள் (ETV Bharat Tamil Nadu) இது குறித்து, சுற்றுலாவின் ஒருங்கிணைப்பாளர் பிரின்லி கூறுகையில், “வெளிநாட்டினர் நமது கலாச்சாரத்தை தெரிந்துகொள்ளும் வகையில் இந்த ஆட்டோ சேலஞ்ச் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம்.” என்றார்.
தொடர்ந்து, பொங்கல் கொண்டாடிய இங்கிலாந்தைச் சேர்ந்த டிமோத்தி என்பவர் கூறுகையில், “தமிழர்களின் கலாச்சாரம் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. வேட்டி, சேலை அணியும்போது தனி மரியாதை கிடைக்கிறது. ஒன்றுகூடிப் பொங்கல் வைத்தது எங்களது வாழ்க்கையில் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணம்” இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரம் செல்லும் வெளிநாட்டினர், வரும் 6 ஆம் தேதி அவரவர் சொந்த நாட்டுக்குத் திரும்புகின்றனர்.