திருச்சி:திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று இரவு ஸ்கூட் விமானம் ஒன்று சிங்கப்பூர் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்யும் பயணி ஒருவர், கரன்சி நோட்டுகள் கடத்திச் செல்வதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில் பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் ஒரு பயணி தனது உடைமையில் மறைத்து 10.33 லட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான யூரோ மற்றும் ஜப்பான் கரன்சிகளை கடத்திச் செல்ல இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரிடம் இருந்து வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப காலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல், வெளிநாட்டு கரன்சிகள், பறவைகள், பாம்புகள் உயிரினங்கள் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் வாடிக்கையாகி வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டாலும் பயணிகள் "குருவி" என்ற போர்வையில் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வரும் சம்பவம் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.