சென்னை:கர்நாடகவைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பானிபூரி கடைகளிலும் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சென்னை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் குமார் கூறியதாவது, "சென்னையில் மட்டுமே ஆயிரக்கணக்கான பானிபூரி கடைகள் உள்ளன. இந்த கடைகளை சோதனை செய்வதை பகுதிகள் வாரியாக பிரித்திருக்கிறோம்.
முக்கியமாக தி.நகர், மெரினா, பெசன்ட் நகர், வட சென்னை போன்று ஒவ்வொரு இடமாக பிரித்திருக்கிறோம். எங்கள் அதிகாரிகள் அனைவருமே இன்று அனைத்து கடைகளிலும் பானிபூரிகளின் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். கர்நாடகாவில் சோதனை செய்தது போல இங்கும் நாம் அதே முறையில் சோதனை மேற்கொண்டு வருகிறோம். இந்த சோதனையில் புற்றுநோய் காரணிகள் ஏதேனும் தென்பட்டால் உடனே அந்த கடைகளின் மீது நடவடிக்கை எடுப்போம்.
நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள்: பொதுவாகவே பானிபூரி கடைகளில், பூரிகளை கையாலே உடைத்து, அதை பானிக்குள் விட்டு பூரியை மூழ்க வைத்து எடுத்து அதை வாடிக்கையாளர் வாங்கிச் சாப்பிடுவது என்பது தரமில்லாத, சுகாதாரமற்ற ஒரு முறையாகும்.
தமிழ்நாட்டில் பெரும்பாலும் பானிபூரி விற்பவர்கள் வடநாட்டு இளைஞர்கள் தான். பானிபூரி என்பது ஒரு நல்ல உணவு. நாம் சில நேரம் சோர்வாக இருக்கும் போது இதை சாப்பிட்டால் காரமாகவும், இனிப்பு சுவையுடனும் இருப்பதால் நமக்கு உற்சாகத்தை அளிக்கக்கூடிய உணவாக இது இருந்துள்ளது.
ஆனால், தற்போது இந்த பானிபூரியை யாரும் முறையாக செய்வதில்லை. குறிப்பாக, சுகாதாரமற்ற நிலையில் கைகளை கழுவாமல் மசாலாக்களை எடுத்து பூரிக்குள் நிரப்பி அப்படியே பானிக்குள் கையை விட்டு எடுத்து தருவதால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
பானியை பொதுவாக அனைவரும் ஒரு நாள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். மீதம் இருந்தால் உடனடியாக அதை வெளியேற்ற வேண்டும். ஆனால், பெரும்பாலும் நிறைய பேர் பானியை வெளியேற்றம் செய்ய மறுக்கின்றனர். இதனால் நோய்த்தொற்று அபாயம் மேலும் அதிகரிக்கும். குளிர்சாதன பெட்டிக்குள் கூட அதை வைக்க மாட்டார்கள்.
பானி தயாரிக்கும் முறை:பானி தயாரிக்கும்போது கொத்தமல்லி, புதினா போன்றவைகளை அரைத்துதான் தயாரிப்பார்கள். அப்படி தயாரிக்கும் போது அவைகள் பச்சை நிறத்தில் தான் வரும். ஆனால், அடர் பச்சை நிறத்தில் வராது. அடர் பச்சை நிறம் வருவதற்காக ஆப்பிள் க்ரீன் என்று சொல்லக்கூடிய நிறமியை இதில் சேர்க்கின்றனர். இந்த சாயத்தை சிறிதளவு போட்டவுடனே அடர் பச்சை நிறமாக பானி மாறிவிடும். அந்த சாயம் கூட புற்றுநோய் வருவதற்கான காரணமாக இருக்கலாம்.
சென்னையில் இன்று சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வகங்களில் சோதனை செய்து ரசாயன சாயம் கலந்திருக்கின்றார்களா என்று சோதனை செய்யப் போகிறோம். அவ்வாறு ரசாயன சாயம் இருப்பதைக் கண்டறிந்தால் பானிபூரி விற்கும் கடைகள் மீது தீவிர நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்ட தடை; காவல்துறைக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு! - madras high court