சென்னை:சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வாயில் போட்ட உடனேயே கரைந்து விடும் மெல்லிய இழையிலான பஞ்சு மிட்டாயை விரும்புவர். சர்க்கரையும், நிறமியும் மட்டுமே உள்ள பஞ்சு மிட்டாயில், விஷத்தன்மை கொண்ட ரசாயனம் கலப்பு இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம் கொண்ட நிலையில், பஞ்சு மிட்டாய்களை சோதனை செய்து பார்த்துள்ளனர். அதில் ரோடமின் பி (RHODAMINE - B) என்ற விஷ நிறமி இருப்பது தெரிய வந்துள்ளது.
ஊதுவத்தி மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் தொழிற்சாலை விஷ நிறமியை சாப்பிடுவதால், கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் என்பதையும் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்தது. பஞ்சுமிட்டாயை பிங்க் ,ரோஸ், மஞ்சள், பச்சை உள்ளிட்ட வண்ணங்களில் மாற்றுவதற்காக சேர்க்கப்பட்ட ரோடமைன் பி என்ற வேதிப் பொருளால் புற்றுநோய் உண்டாக்கும் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் ஆய்வில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை ஆய்வு செய்தனர். இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் பஞ்சுமிட்டாய் பகுப்பாய்வு சோதனைக்காக அனுப்பிருந்ததாகவும், அந்த சோதனைகள் முடிவில் ரோடமைன் பாசிட்டி பி என்ற வேதிப்பொருள் கலக்கப்பட்டுள்ளது உறுதியானதாக தெரிவித்திருந்தார்.