தருமபுரி: தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில் மலைப் பாதையில் ஏற்படும் விபத்தைத் தடுக்க 6.6 கி.மீ தூரம் மேம்பாலம் அமைக்க வேண்டும் எனத் தருமபுரி எம்.பி செந்தில் குமார் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகக் கோரிக்கை மனு அளித்தும், தொடர்ந்து மத்தியக் கப்பல் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்களைச் சந்தித்தும் வலியுறுத்தி வந்தார்.
இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.905 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்க அனுமதி அளித்து ஒப்பந்தப் புள்ளி கோரியிருந்தது. ஒப்பந்தப்புள்ளி முடிவு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை இன்று(மார்ச்.11) நடைபெற்றது.
இந்த பணிகளைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் சாலை அமைக்கும் பணியினைத் தொடங்கி வைத்தார். தருமபுரி சுங்கச் சாவடி அருகே எம்பி செந்தில்குமார் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி அன்பைப் பகிர்ந்தார். பின்னர், மேம்பாலச் சாலை அமைக்கப்பட உள்ள பகுதிக்கு நேரடியாகச் சென்று அதிகாரியிடம் ஆய்வு நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிகமாக விபத்து நடக்கும் தொப்பூர் கணவாய் பகுதியில் முதல் முறையாக நான்கு வழிச் சாலை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருக்கும் பொழுது கடந்த 1996ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. சாலை விரிவாக்கத்திற்குப் பிறகும் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது.
விபத்து நடைபெறும் பகுதிக்கு நிரந்தரத் தீர்வு தேவை என்பதன் தொடர் முயற்சியாக மத்திய அரசிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உதவியுடன் காணொலி காட்சிகள் தயார் செய்யப்பட்டு மத்திய அரசு அதிகாரிகளுக்கு விளக்கியதன் காரணமாக நான்கு திட்டங்கள் தயார் செய்யப்பட்டு இறுதியாக மூன்று சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.