திண்டுக்கல்: இந்திய தேர்தல் ஆணையம் நேற்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறும் தேர்தலில், தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடைமுறை அமல்படுத்தப்பட்டதை அடுத்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ஆட்சியர் பூங்கொடி, பறக்கும் படை வாகனங்களை அறிமுகப்படுத்தி, தேர்தல் விதிமீறல்களைத் தடுக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
அந்த வகையில் ஆத்தூர், நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மற்றும் நத்தம் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளை ஒருங்கிணைத்த நாடாளுமன்ற தொகுதிக்கு, பறக்கும் படை வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், அதிநவீன கண்காணிப்பு கேமராக்களும் அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:'தேர்தலின்போது பணம் கையாடல் செய்தால் நடவடிக்கை பாயும்' - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
மேலும், ஒவ்வொரு பறக்கும் படையிலும் ஒரு பெண் காவலர், ஒரு ஆண் காவலர், முதல் நிலை அதிகாரி, கேமரா ஒளிப்பதிவு செய்யும் நபர் மற்றும் வாகன ஓட்டுநர் ஆகியோர் அடங்கிய ஆய்வுக் குழு, தேர்தல் விதிமுறைகளை மீறி நடைபெறும் செயல்களை தடுத்து நிறுத்துவது, வாகனங்களைச் சோதனை செய்வது உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
ஒரு சோதனை ஆய்வுக் குழுவினருக்கு 8 மணி நேர பணி என்கிற அடிப்படையில், காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை, பின்னர் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை சுழற்சி அடிப்படையில், அதிகாரிகள் பணி மேற்கொள்ள உள்ளனர். அதன் அடிப்படையில், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகப் பகுதியில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், திண்டுக்கல்-தேனி இடையேயான சாலையில், பறக்கும் படையைச் சேர்ந்த சவுடமுத்து, சிறப்பு சார்பு ஆய்வாளர் சர்க்கரை முகமது தலைமையான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல், கொடைரோடு அடுத்த சுங்கச்சாவடி பகுதிகள் மற்றும் நிலக்கோட்டை, வத்தலகுண்டு பகுதிகளில் பறக்கும் படை ஆய்வுக் குழுவினர் சோதனைப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படிங்க:சூடுபிடிக்கும் தேர்தல் பணி! விழுப்புரத்தில் சோதனையில் களமிறங்கிய பறக்கும் படை..