தென்காசி: சங்கரன்கோவில் மலர் சந்தையில் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, கடந்த வாரம் ரூ.2 ஆயிரத்து 100க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ, தற்பொழுது ரூ.3 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில், ஏலம் மூலம் மொத்தமாகவும், சில்லறையாகவும் வியாபாரிகளுக்கு பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு பெருமளவு அரளிப்பூ, பிச்சிப்பூ, மல்லிகைப்பூ, வாடாமல்லி, மரிக்கொழுந்து, கேந்தி, கனகாம்பரம், கோழிக்கொண்டை, சேவல் பூ, சம்மங்கி என பல்வேறு வகையான பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுகின்றன.
இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் பூக்களை தினந்தோறும் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், நாளை (பிப்.11) சுபமுகூர்த்த தினம் என்பதால், பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் மலர் சந்தையில் பிச்சிப்பூ ரூ.2 ஆயிரத்து 100க்கு விற்கப்பட்டது. ஆனால், தற்பொழுது ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.3 ஆயிரமாக வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. சுபமுகூர்த்த தினத்தையொட்டி, பூக்களின் விலை உயர்ந்துள்ளது என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.