சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய பூக்கள் விலை ஈரோடு:சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லை பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது கடும் பனிப் பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி சரிந்துள்ளதாலும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் முகூர்த்த சீசன் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்ததுள்ளது.
பூக்களின் வரத்து குறைந்து, அதன் தேவை அதிகரித்துள்ளதால் சத்தியமங்கலம் மார்க்கெட்டில் பூக்களை கொள்முதல் செய்வதில் வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும், சத்தியமங்கலத்தில் இருந்து மல்லிகை, முல்லை பூக்களை பதப்படுத்தி, ஐஸ் பெட்டியில் வைத்து விமானம் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் சத்தியமங்கலத்தில் விளையும் பூக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சத்தியமங்கலம் வட்டாரத்தில் தினந்தோறும் 4 டன் பூக்கள் வந்த நிலையில், கடும் பனிப் பொழிவு காரணமாக மல்லிகை, முல்லை பூக்களின் வரத்து தற்போது 1 டன்னாக குறைந்து உள்ளது. திருமண சுப நிகழ்வுகள் நாடு முழுவதும் நடைபெறுவதால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களை கொள்முதல் செய்ய வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவியதால், மல்லிகை கிலோ ரூ.3 ஆயிரமாக விற்கப்பட்ட நிலையில் இன்று கிலோ ரூ.5 ஆயிரத்து 100 ஆக விற்பனையானது. முல்லை பூ கிலோ 1,275இல் இருந்து 2 ஆயிரத்து 200 வரையிலும் ஏலம் போனது. கடும் பனிப் பொழிவு காரணமாக மல்லிகை பூ விளைச்சல் குறைந்துள்ள நிலையில் தற்போது விலை அதிகரித்துள்ளதால் ஓரளவு லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தமிழகத்தில் விடுமுறை" - வானதி சீனிவாசன் கோரிக்கை!