தருமபுரி: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேற்றப்படும் உபரி நீர் தொடர்ந்து தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் சென்று மேட்டூர் அணையைச் சென்றடைகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (ஜூலை 27) காலை ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்மட்டம் பிற்பகல் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடியாகவும், மாலை நிலவரப்படி ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை ஆணைய செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.