சென்னை:ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பயணிகளின் நலன் கருதி தற்காலிகமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு ஃபெஞ்சல் புயல் கரையை கடந்ததையடுத்து, சுமார் 12 அரை மணி நேரத்திற்கு பின்பு இன்று (டிச.1) ஞாயிறு அதிகாலை ஒரு மணியில் இருந்து மீண்டும் சென்னை விமான நிலையம் செயல்பட தொடங்கி உள்ளது.
தகவல் அறிந்து வரவும்:இதனால், விமான பயணிகள் அனைவரும் தாங்கள் பயணம் செய்ய இருக்கும் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு தங்களுடைய விமானங்கள் எப்போது புறப்படும் என்பது குறித்த தகவலை கேட்டு அறிந்து கொண்டு சென்னை விமான நிலையத்திற்கு வரும்படி விமான நிலையம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செயல்பட தொடங்கிய விமான சேவை:ஏற்கனவே, இன்று அதிகாலை 4 மணியில் இருந்து சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கும் என்று அறிவித்திருந்த நிலையில் 3 மணி நேரம் முன்னதாகவே விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 13 விமானச் சேவைகள் ரத்து!
ஆய்வு கூட்டம்:நேற்று நள்ளிரவு புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களின் மேலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்திய நிலையில், தற்போது புயல் கரையைக் கடந்து, வானிலை சீரடைந்து விட்டதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னரே விமானனங்களை இயக்கப்பட தொடங்கியதாக விமான நிலையம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயல்பு நிலைக்கு திரும்பிய விமான நிலையம்:மேலும், நேற்று பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலைய ஓடுபாதை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி கடல் போல் காட்சியளித்த நிலையில் தற்போது தேங்கிய மழைநீர் வடிந்து, விமான போக்குவரத்து சீராக இருப்பதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகள் விமான சேவை இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் கூடுதல் பேருந்துகளை இந்த வழித்தடத்தில் இயக்கியிருந்தது. இந்நிலையில், தற்போது விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததையடுத்து, நேற்றைய விமான பயணத்தைத் தவறவிட்ட பயணிகள், அது தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ள அந்தந்த விமான நிறுவனங்களை அணுகுமாறு சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவுத்தியுள்ளது.
இதையும் படிங்க:நடுவானில் திடீர் கோளாறு: சென்னையில் தரையிறங்கிய மலேசியன் ஏர்லைன்ஸ்!