ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. தாளவாடி வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், சிறுத்தை மற்றும் புலி ஆகியவை கால்நடைகளை வேட்டையாடி வருவதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில், தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட கும்டாபுரம் கிராமத்தின் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் சிறுத்தை இறந்து கிடப்பதாக தாளவாடி வனத்துறைக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர், இறந்து கிடந்த சிறுத்தையினை மீட்டு, அதற்கு உடற்கூராய்வு செய்யப்பட்டு, அதன் மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதில் சிறுத்தை விஷம் வைத்தோ அல்லது மின்சாரம் பாய்ந்தோ இறக்கவில்லை என தெரிய வந்துள்ளது. இறந்த சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும், அதற்கு 5 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பின்னர், சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைத்து தேடுதல் வேட்டை நடத்தி உள்ளனர்.
மேலும், உயிரிழந்த சிறுத்தையின் உடல் மாதிரிகள் மும்பையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகே சிறுத்தையின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என ஆசனூர் புலிகள் காப்பகத்தின் இணை கள இயக்குநர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சமோசா முதல் சிக்கன் பிரியாணி வரை.. வேட்பாளர் எவ்வளவு செலவு செய்யலாம்? - தேர்தல் ஆணையத்தின் விலை பட்டியல் கூறுவது என்ன? - Election Expenditure List