வேலூர்:வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளைப் போதை மாத்திரைகளாக மாற்றி, அவற்றை சட்டவிரோதமாக இளஞ்சிறார்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பாகாயம் காவல் ஆய்வாளர் நாகராஜன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர்களின் தலைமையிலான போலீசார், முல்லை நகர் முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் இரவு நேரத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கிஷோர்குமார்(19) என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று, ஆரஞ்சு நிறம் கொண்ட மாத்திரைகளான (Tapentonal) என்னும் வலி நிவாரணி மாத்திரைகளைப் போதை மாத்திரைகளாக மாற்றி பிளாஸ்டிக் கவரில் வைத்து முத்துமண்டபம் பகுதியைச் சேர்ந்த இளஞ்சிறார்க்கு விற்கும் போது கையும் களவுமாகப் பிடிபட்டான்.
இதனையடுத்து கிஷோர்குமாரிடம் போலீஸ் நடத்திய தொடர் விசாரணையில், கிஷோரின் மாமா ரஞ்சித் என்பவர் மூலம் பள்ளிகொண்டவை சேர்ந்த அபிஷேக் என்பவரிடம் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளையும் அதற்குப் பயன்படுத்தும் சிரஞ்சிகளையும் சட்டவிரோதமாக வாங்கி வந்துள்ளார்.