சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் 10 உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்தன. இதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தலைவர் மற்றும் 14 உறுப்பினர் பதவிகள் உள்ளன. ஆனால், தற்போது முனியநாதன் ஐஏஎஸ் (ஒய்வு), ஜோதி சிவஞானம், அருள்மதி, ஆரோக்கியராஜ் ஆகிய 4 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
அதில், ஒருவரான முனியநாதன், தலைவர் பொறுப்பை கூடுதலாக வகித்து வருகிறார். தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் பல மாதங்களாக காலியாக இருந்து வரும் நிலையில், டி.ஜி.பி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற சைலேந்திரபாபு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கு தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டார்.
மேலும், 10 உறுப்பினர் பதவிகளை நியமனம் செய்வதற்கான பெயர்களை தமிழக அரசு, ஆளுநருக்கு கோப்பு மூலம் பரிந்துரை செய்திருந்தது.இந்த நிலையில், தமிழக அரசு அனுப்பிய கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல், 2023 ஆகஸ்ட் 22ஆம் தேதி சைலேந்திரபாபு தொடர்பாக சில விளக்கங்களைக் கேட்டு மீண்டும் தமிழக அரசுக்கு கோப்பை திருப்பி அனுப்பி இருந்தார்.
மேலும், அவர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி, எதன் அடிப்படையில் இவர்களை தகுதி வாய்ந்தவர்கள் என தேர்வு செய்தீர்கள் என கேள்வியும் எழுப்பி இருந்தார். மேலும், வெளிப்படைத் தன்மையுடன் பணியாளர் தேர்வாணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான விளம்பரம் செய்யப்பட்டதா எனவும், இவர்களைத் தேர்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவில் யார், யார் உறுப்பினர்களாக இருந்தனர் எனவும், அவர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் இவர்களைத் தேர்வு செய்தனர் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டு இருந்தார்.