சென்னை:வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஆகியவற்றைப் பொருத்தும் பணிகள், சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இன்று (ஏப்.10) தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெறும் இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில், 19 லட்சத்து 17 ஆயிரத்து 135 ஆண்கள், 19 லட்சத்து 82 ஆயிரத்து 875 பெண்கள், 1,157 மூன்றாம் பாலினத்தவர்கள், என மொத்தம் 39 லட்சத்து ஆயிரத்து 167 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணிகள் இன்று வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெறும் இந்த பணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி அனைத்து தேர்தல் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 16 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் முன்னிலையில் தொடங்கி நடைபெற்று வரும் இந்த பணி, இன்னும் 2-3 நாட்களில் முடிவடையும்.
11 ஆயிரத்து 843 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4 ஆயிரத்து 469 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 4 ஆயிரத்து 852 வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை கருவிகளும் (வி.வி.பேட்) ஏற்கனவே 16 சட்டமன்றத் தொகுதிகளின் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் சரி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
மத்திய சென்னையில் 31 வேட்பாளர்கள் என்பதால், 2 வாக்குப்பதிவு எந்திரமும், வடசென்னையில் 35 வேட்பாளர்களும், தென் சென்னையில் 41 வேட்பாளர்களும் இருப்பதால் தலா 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளில் மொத்தம் 107 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதுவரை சென்னையில் 16.7 லட்சம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது.
19 ஆயிரத்து 412 பயிற்சி பெற்ற தேர்தல் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர், தபால் வாக்குகளுக்காக இதுவரை 14 ஆயிரத்து 735 அரசு ஊழியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இன்று வரை தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், 14 கோடியே 72 லட்சத்து 70 ஆயிரத்து 399 ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். அதே போல் வருமான வரித்துறையினரால் ரூபாய் 19.92 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 59 லட்சத்து 33 ஆயிரம் மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருட்கள் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேனி சுயேட்சை வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு; தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தல்! - Theni Independent Candidate