சென்னை:வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ள நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 25 -ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழையும், 26, 27ஆம் தேதி கன முதல், மிக கன மழைகான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், 26, 27ஆம் தேதிகளில் கடலோர ஆந்திராவிலும், கேரளாவில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர் மழை முன்னெச்சரிக்கையாகவும், தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவும், குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கையாக, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் நாளை, வெள்ளிக்கிழமை (நவ.22) தேதி முதல் கடலுக்கு செல்ல மீனவர் நலத்துறை தடை விதித்துள்ளது. மேலும், மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள், இன்று வியாழக்கிழமை (நவ.21) திரும்பி வர அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.