கோயம்புத்தூர்: மதுக்கரை நகராட்சிக்குட்பட்ட குரும்பபாளையம் பகுதியில் மஞ்ச பள்ள ஓடை அமைந்துள்ளது. மழைக் காலங்களில் இந்த ஓடையில் வரும் தண்ணீர், வாளையாறு பகுதி வழியாக கேரளாவிற்குச் செல்கிறது. இந்த மஞ்ச பள்ள ஆற்று ஓடை தடுப்பணையில் கட்டப்பட்டுள்ளதால், நீரானது குரும்பபாளையம் பகுதி விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் இந்த தடுப்பணை தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த இரு நாட்களாக இந்த தடுப்பணையில் ஆயிரக்கணக்கான மீன்கள் திடீரென செத்து மிதக்கின்றன. இதன் காரணமாக, அந்தப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள தனியார் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் காரணமாக மீன்கள் இறந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக, மழை பெய்யும் போது மழைத் தண்ணீருடன் ஆலைக்கழிவு நீரையும் கலந்து விடுவதாகவும், இந்த முறையும் மழை பெய்த போது கழிவுநீர் கலந்து விடப்பட்டு இருப்பதாகவும், அதனால் மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், தடுப்பணையில் மீன்கள் இறந்தது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகளும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் இன்று நேரடியாக தடுப்பணையில் ஆய்வு மேற்கொண்டனர்.