சேலம்: சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் ஆண்டுக்கு 77 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டு வளர்க்கப்படுகிறது. அணையில் வளர்க்கப்படும் மீன்களைப் பிடிக்க சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உரிமம் பெற்று உள்ளனர். மேட்டூர் அணையில் பிடிக்கப்படும் மீன்களை, அங்கு செயல்பட்டு வரும் மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, ஏழு விற்பனை மையங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அண்மைக்காலமாக மீனவர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஆந்திரா மீன்களையும், ஏரி மீன்களையும் கொள்முதல் செய்து, மேட்டூர் அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால் மேட்டூர் அணையில் பிடிக்கப்படும் கட்லா, ரோகு, மிருகால், ஜிலேபி உள்ளிட்ட சிறிய வகை மீன்களை, மீனவர் கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்யாமல், விடுமுறை நாட்களில் மட்டுமே மீனவர்கள் பிடித்து வரும் அனைத்து மீன்களையும் கொள்முதல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் காரணமாக, விடுமுறை நாளான இன்று, மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களை கூட்டுறவு சங்கத்துக்கு விற்பனை செய்யாமல் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து மீனவர்கள் கூறுகையில், "இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் மேட்டூர் அணையில் மீன்கள் பிடிக்க உரிமம் பெற்று உள்ளோம். இந்த ஒரு தொழிலை நம்பியே நாங்கள் 50 ஆண்டு காலமாக வாழ்ந்து வருகிறோம்.