மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத் திறப்பு விழா இன்று (மார்ச்.04) நடைபெற்றது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கட்டடத்தைத் திறந்து வைத்து தமிழக அரசு சார்பில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதில், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் மீன்வளத்துறை சார்பாக பூம்புகார் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ராமச்சந்திரன் மகன் ரமேஷ் என்பவருக்கு இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட விசைப் படகிற்கான 2 லட்சம் ரூபாய்க்கான நிவாரணத் தொகை காசோலையாக வழங்கினார்.
ஆனால், நிவாரணத் தொகைக்கான அனுமதி ஆணையை மீண்டும் முதலமைச்சரிடமே திருப்பி வழங்கினார். இதனால், மேடையில் சலசலப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், மீனவர் ரமேஷை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.