திருச்சி: திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நளினி என்ற பெண்ணுக்கு, திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்களிக்க வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. அது பற்றி நளினி கூறியதாவது, “மாவட்ட நிர்வாகத்தால் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இலங்கைத் தமிழர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை கண்காணிப்புடன் வைத்திருப்பார்கள்.
அதனால் இங்குள்ள மக்கள் மன உளைச்சலில் தான் உள்ளனர். எங்களை இலங்கைத் தமிழர் என்று தெரிவிப்பதை விட, இந்திய வம்சாவளியினர் என்று அதிகாரிகள் அடையாளப்படுத்த வேண்டும் என்று தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்களுக்கான பிறப்புச் சான்றிதழில் இந்தியத் தமிழர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இலங்கையில் வழங்கப்படும் அடையாள அட்டையில், இந்தியர் என்பதற்காக எக்ஸ் என்றும் குறிப்பிட்டிருப்பார்கள்.
அதனால் அங்கு வாக்குரிமை இல்லாத நிலையில், இங்கு வந்து 40 ஆண்டுகள் ஆகியும் அந்த உரிமை இல்லாமல் முடங்கி கிடந்தோம். அதில் எனக்கு மட்டும் வாக்குரிமை கிடைத்துள்ளது. முகாமில் உள்ள அனைவருக்கும் இந்திய குடியுரிமை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான் இருக்கிறோம். மத்திய அரசும், மாநில அரசும் எங்கள் எதிர்பார்ப்பை கவனத்தில் கொண்டு குடியுரிமை வழங்க வேண்டும்.
தற்போது அரசு அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியால், முதல் முறையாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் எனக்கு வாக்குரிமை கிடைத்துள்ளது. இதை என்னைச் சார்ந்த மக்களுக்கான உரிமையாக கருதுகிறேன். எனது தாத்தா, பாட்டி இந்தியாவில் பிறந்தவர்கள். எனது அப்பா, அம்மா இந்திய வம்சாவளியினர். நான் ராமநாதபுரத்தில் தான் பிறந்தேன்.