சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையின் 2025ம் ஆண்டிற்கான முதல் கூட்டம் ஜனவரி 6 காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையுடன் துவங்க உள்ளது. ஆளுநர் உரைக்கான கூட்டத்திற்கு பின்னர் அலுவல் ஆய்வுக்குழுவின் கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்து சபாநாயகர் அறிவிக்க உள்ளார்.
சட்டப் பேரவை கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சியில் தேர்வுச் செய்யப்பட்ட தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், தனி அலுவலர்களை நியமனம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை எழுப்புவதற்கு எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், ஆளுநர் உரை மீதான கூட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மரபுப்படி ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை இடம் பெறுவது வழக்கமாகும். ஆளுநரின் உரையில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள், கொள்கைகள், அரசின் சாதனைகள், அந்த ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் ஆகியவை இடம் பெறும். ஆளுநரின் உரை சட்டப்பேரவையால் தயார் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை தமிழ்நாடு ஆளுநர் சட்டப் பேரவையில் படித்து, பேரவையின் முதல் கூட்டத்தை தொடங்கி வைப்பார்.
2023ஆம் ஆண்டு சர்ச்சை:
திமுக ஆட்சி அமைந்தப் பின்னர் தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநருக்கு இடையே உள்ள மோதல் காரணமாக அரசினால் கொடுக்கப்படும் பேச்சை திருத்தம் செய்து ஆளுநர் ஆர். என். ரவி படிப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.