சென்னை:சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (Chennai Metro Rail Limited) இரண்டாம் கட்ட வழித்தடத்தில் ஒட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயிலை 3 பெட்டிகள் வீதம், மொத்தம் 108 பெட்டிகளைக் கொண்ட 36 மெட்ரோ ரயில்களை வழங்குவதற்கான வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, பணியாளர்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல் மற்றும் குறைபாடு பொறுப்பு போன்றவற்றை உள்ளடக்கிய ஒப்பந்தம், அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு (Alstom Transport India Limited) ரூ.1,215.92 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகளை உற்பத்தி செய்யும் பணியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம், ஸ்ரீ சிட்டியில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கியது. முதல் மெட்ரோ ரயில் பெட்டிக்கான உற்பத்தி தொடங்கிய நிலையில், பெட்டியில் உள்ள பல்வேறு உபகரணங்களைப் பொருத்தும் பணிகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து, முதல் மெட்ரோ ரயிலுக்கான அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த நிலையில், ஒட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயிலை, அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் சோதனை தடத்திற்கு இன்று (செப்.22) மாற்றப்பட்டது.