தேனி: தேனி புதிய பேருந்து நிலையத்தில் கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்துமிடத்தின் அருகே, தேனி நகராட்சி சார்பாக குப்பைக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைக் கிடங்கில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தேனி நகராட்சி பகுதியில் உள்ள குப்பைகளை இங்கு கொண்டு வந்து மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை 3 மணியளவில், அங்கு வைத்திருந்த பிளாஸ்டிக் பொருட்களில் திடீரென்று தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
சிறிய அளவில் பற்றி எரிந்த தீ, வெயிலின் காரணமாக மளமளவென பெருமளவில் எரியத் தொடங்கியது. இதனால், பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால், பேருந்து நிலையத்தில் இருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.