தமிழ்நாடு

tamil nadu

ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்காத சார்பதிவாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்! - Right to Information Act

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 7:37 PM IST

Refuses to provide information under RTI: ஓய்வு பெற்ற சர்வேயருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் தர மறுத்த அப்போதைய சார்பதிவாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

fine of twenty five thousand will be imposed on registrar for refuses to provide information under RTI
ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்காத சார் பதிவாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்!

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி. இவர் ஓய்வு பெற்ற அரசு சர்வேயர். இவரது தந்தை சுப்பையா பெயரில், அய்யநேரி ஊராட்சிக்கு உட்பட்ட சுபா நகரில் உள்ள நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

நீதிமன்ற வழக்கிற்கு சில ஆவணங்கள் தேவைப்பட்டதால். தனது தந்தை நிலம் தொடர்பாக, கடந்த 2020ஆம் ஆண்டு 12 டிசம்பர் அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6 (1)-ன் கீழ் சில தகவல்களை குருசாமி மாவட்டப் பதிவாளரிடம் கேட்டார்.

குருசாமி கேட்ட கேள்விகளுக்கு பிரிவு 6 (3)-ன் கீழ் பதில் அளிக்குமாறு, கோவில்பட்டி சார்பதிவாளருக்கு பரிந்துரை செய்கிறார். ஆனால், அப்போது கோவில்பட்டி சார்பதிவாளராக இருந்த பாஸ்கரன், குருசாமி கேட்ட கேள்விகளுக்குப் பதிலாக மாறுபட்ட பதிலை தந்த காரணத்தினால், குருசாமி மாவட்ட பதிவாளருக்கு பிரிவு 19 (1)-ன் கீழ் மேல்முறையீடு செய்தார். ஆனால், எவ்வித பதிலும் வரவில்லை என்பதால், கடந்த 2021 ஏப்ரல் 12ஆம் தேதி அன்று தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் பிரிவு 18 (1)-ன் கீழ் புகார் செய்தார்.

இந்த புகார் தொடர்பாக கடந்த 2024 ஏப்ரல் 03ஆம் தேதி சென்னையில் விசாரணை நடத்திய ஆணையம், குருசாமிக்கு சரியான தகவல் தர மறுத்த அப்போதைய கோவில்பட்டி சார்பதிவாளரும், பொது தகவல் அலுவலருமான பாஸ்கரனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது மட்டுமின்றி, அந்த தொகையை குருசாமியிடம் கொடுக்கும்படி உத்தரவிட்டது.

இதையடுத்து, தற்போதைய கோவில்பட்டி சார் பதிவாளர் சூசை ஜேசுதாஸ், பாஸ்கரனிடம் வசூலித்த ரூ.25 ஆயிரத்திற்கான வரைவோலையை (டி.டி) குருசாமியிடம் வழங்கினார். தான் கேட்ட தகவலை தனக்கு சரியான நேரத்தில் வழங்கி இருந்தால் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு முடிந்து தனது இடப்பிரச்சினை முடிவடைந்து இருக்கும். மேலும், தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்ட இருக்காது. இனியாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கும் கேள்விகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குருசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:40 ஆண்டு ஆக்கிரமிப்பிலிருந்த நிலம் மீட்பு.. ரூ.10 கோடி நிலத்தின் பின்னணி என்ன? - Encroachment Land Recovery

ABOUT THE AUTHOR

...view details