தூத்துக்குடி:கோவில்பட்டி, பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (42). இவர் பெயிண்டிங் காண்ட்ராக்டராகவும், பைனான்சியராகவும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில், இவர் வீரவாஞ்சி நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் எதிரே உள்ள மைதானத்தில் பீர் பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலையான முத்துப்பாண்டிக்கும், பாரதி நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் முத்துப்பாண்டி வீரவாஞ்சி நகரில் உள்ள தனது தாய் மாரியம்மாள் வீட்டுக்கு வழக்கம்போலச் சென்றுள்ளார்.