திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்தவர், பரிமளா. இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில், பரிமளா கடந்த 2003ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்து, சுமார் 21 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
மேலும் பரிமளா, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணியாற்றி வந்த போது, கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி பணி முடித்துவிட்டு, தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக இவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், பெண் தலைமைக் காவலர் பரிமளாவுடன் 2003ஆம் ஆண்டு ஒன்றாக காவலர் பணியில் சேர்ந்த பெண் காவலர்கள், 'தோழி' என்ற வாட்ஸ்ஆப் குழு மூலம் ஒன்றிணைந்து, "நமக்குள் ஒன்றிணைவோம்.. நமக்காய் ஒன்றிணைவோம்" என்ற நோக்கத்தில், பரிமளாவின் குடும்பத்தினருக்கு உதவி செய்துள்ளனர்.