சென்னை: நடப்பாண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று (ஜூன் 26) மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரையில் பேசியதாவது, "கடந்த ஆண்டு ஏற்பட்ட மிக்ஜாம் புயலாக இருந்தாலும் சரி, அதற்கு பிறகு வந்த தென்மாவட்ட வெள்ளமாக இருந்தாலும் சரி, அதற்கெல்லாம் நாம் ரூ.37 ஆயிரத்து 906 கோடி மத்திய அரசிடம் நிவாரணத் தொகையாக கேட்டிருக்கிறோம்.
ஆனால், ஏறத்தாழ ரூ.38 ஆயிரம் கோடி நாம் கேட்கிறபோது, மத்திய அரசு தொகை என்பது வெறும் ரூ.276 கோடி தான் நமக்கு கொடுத்தது. வெறும் ரூ.276 கோடி ரூபாய் தான் நமக்குக் கிடைத்திருக்கிறது. நீங்கள் (மத்திய அரசு) பொன் வைக்க வேண்டிய இடத்திலே, பொன் வைக்கத் தயாராக இல்லை என்றாலும்கூட, பொன் வைக்க வேண்டிய இடத்திலே நீங்கள் பூ வைக்கக்கூட தயாராக இல்லை என்பது தான், எங்களுடைய வருத்தம்.
இன்னும் கூட ஒருவகையில் சொல்வேன். பொன் வைக்க வேண்டிய இடத்தில் நீங்கள், பூ வைக்காவிட்டாலும் பரவாயில்லை, உங்களுக்குப் பிடித்த ஆண்டாளுடைய நாச்சியார் திருமொழியிலிருந்துகூட நான் சொல்வேன். நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் மிக அழகாக சொல்வாரே, 'புண்ணிலே புளி பெய்தாற்போல' என்று. அதைப்போல நீங்கள் பனை ஏறி விழுந்தவனை கடா ஏறி மிதித்த கதையாக, ஏற்கெனவே பேரிடரால் துன்பப்பட்டிருக்கக்கூடிய எங்கள் நிலையை மறந்து, நீங்கள் ரூ.276 கோடியை கொடுத்திருக்கிறீர்கள்.
இது எந்தவகையில் நியாயம் என்பதைத்தான் உங்களிடத்தில் நான் கேட்கிறேன். இதைதான் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்டிருக்கிற மிகப்பெரிய அநீதி. காலம் கடந்துபோய்விடவில்லை. இப்போதும் கூட நீங்கள் அந்த பேரிடர் நிவாரண நிதிக்கு, மிகக் கூடுதலான நிதியை தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்" என்றார்.
இதையும் படிங்க:சட்டப்பேரவை கூட்டத்தொடர்: அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட நிதித் துறை புதிய அறிவிப்புகள் என்ன? - TN Assembly 2024