சென்னை: சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் முகமது அலி (30). இவர் சினிமா தயாரிப்பாளர் ஆவார். இவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் சென்னையைச் சேர்ந்த 28 வயது பெண் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணிக்கு சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், அப்பெண் கடந்த மே 13ஆம் தேதி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், முகமது அலி தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறி தொல்லை கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் குடித்த குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து, தன்னிடம் தவறாக நடந்துகொண்டு அதனை வீடியோவாக பதிவு செய்திருப்பதாகவும், அதனால் தான் கர்ப்பம் அடைந்த நிலையில் சத்து மாத்திரைகள் எனக் கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து கருவினை கலைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.