சென்னை:அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரின்படி, தான் கடந்த டிசம்பர் 23ம் தேதி இரவு தனது நண்பருடன் பல்கலைக் கழக வளாகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாகவும். அப்போது அடையாளம் தெரியாத 2 நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருவதாக கோட்டூர்புரம் உதவி ஆணையர் பாரதி ராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை போலீசார் விடுத்துள்ள செய்திக்குறிப்பின் படி, "பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் டிசம்பர் 23ம் தேதி இரவு 7.45 மணியளவில் தனது ஆண் நண்பருடன் பல்கலைக் கழக வளாகத்தில் இருந்துள்ளார். நெடுஞ்சாலை ஆய்வகம் அருகே இருந்த போது ஒரு அடையாளம் தெரியாத நபர் தலையிட்டு ஆண் நண்பரை தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆண் நண்பர் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டார்" என கூறப்பட்டுள்ளது.
"இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், அந்த பெண்ணை தன்னோடு உறவு கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் தான் மாதவிடாயில் இருப்பதாக அந்த பெண் கூறியதும். வாய் மூலமாக உறவு கொள்ளுமாறு அந்த நபர் வற்புறுத்தியுள்ளார் எனவும் அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.
ஈடிவி பாரத்திடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர் மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்ததாகவும், புகார் அளித்தால் இதனை வெளியிடுவோம் என மிரட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
புகார் அளித்த மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரிடமும் விசாரணை நடத்தி வருவதாகவும், அவர்கள் கூறிய அங்க அடையாளங்களின்படியும், பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்தின், பாலியல் வன்கொடுமை தடுப்பு கமிட்டியிடம் (Protection of Sexual Harassment Committee) புகார் அளிக்கப்பட்டு, பின்னர் போலீசாரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும். இதன் பேரில் டிசம்பர் 24ம் தேதி மாலை 4 மணியளவில் வழக்குப்பதிவு செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாலியல் வன்கொடுமை (Rape) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளான 63(a), 64(i), 75(I)(ii)(iii) BNS ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு (Cr.No.3/2024) செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவியின் புகார் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கோட்டூர்புரம் உதவி ஆணையர் வழிகாட்டுதலின்படி, ராஜா அண்ணாமலைபுரம் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழக உள்புகார்க் குழுவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என உயர்கல்வித்துறை சார்பில் அண்ணா பல்கலைக் கழக பதிவாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் பல்கலைக் கழக நிர்வாகம் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், பல்கலைக் கழக பதிவாளர் முனைவர். பிரகாஷ் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், "பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் எப்போதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.