தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சந்தையில் இடம் வேண்டும்; மீனை தரையில் கொட்டி வியாபாரிகள் போராட்டம்! - THIRUVOTTIYUR FISH MARKET

திருவொற்றியூரில் புதியதாக கட்டப்படவுள்ள சந்தையில் ஒதுக்கீடு வழங்கக் கோரி, மீன்களை தரையில் கொட்டி பெண் மீன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தரையில் கொட்டப்பட்ட மீன்கள்
தரையில் கொட்டப்பட்ட மீன்கள் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2024, 1:00 PM IST

சென்னை: திருவொற்றியூரில் புதியதாக கட்டப்படும் சந்தையில், மீன் வியாபாரிகளுக்கு அமைந்துள்ள 120 கடைகளில் 70 கடைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், புதிய சந்தையில் பழையபடி 120 கடைகளை முறையாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து, மீன்களை தரையில் கொட்டி பெண் மீன் வியாபாரிகள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவொற்றியூர் சந்தை வளாகத்தில் காய்கறி கடைகள், மீன் கடைகள் என 300 கடைகள் இயங்கி வருகின்றது. ஆனால், இந்த சந்தை போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும், சந்தையில் உள்ள கட்டடங்கள் பழுது அடைந்த நிலையிலும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சந்தையைப் புதுப்பிப்பதற்காக திருவொற்றியூர் மண்டலத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

புதிய சந்தை:

அதன்படி, ரூ.10 கோடி செலவில் சந்தையை புதுப்பிப்பதற்கான திட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான கலந்தாய்வு ஆலோசனை கூட்டமும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவொற்றியூர் பகுதியில் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், புதிதாக கட்டப்படும் சந்தையில் தற்போது மீன் வியாபாரிகளுக்கு அமைந்துள்ள 120 கடைகளில் சுமார் 70 கடைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சந்தையில் கடை ஒதுக்கியவர்களுக்கு நேற்று (டிச.11) புதன்கிழமை கைரேகை எடுப்பதற்காக வந்த அதிகாரிகள் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே கைரேகை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

தர்ணா போராட்டம்:

இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள், தாங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சந்தையில் மீன் வியாபாரம் செய்து வருகிறோம். எனவே, தற்போதுள்ள 120 கடைகளையும் முறையாக வழங்க வேண்டும் எனக்கூறி பெண் மீன் வியாபாரிகள் மீன்களை தரையில் போட்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சந்தை பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோரிக்கை:

இதனையடுத்து, பெண் மீன் வியாபாரிகள் திருவெற்றியூர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக 7 ஆவது வார்டு கவுன்சிலர் கே.கார்த்திகேயன், பெண் மீன் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தொடர்ந்து, புதிதாக கட்டப்படும் மீன் சந்தை குறித்து மண்டல அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதில், மார்க்கெட்டில் அனைத்து தரப்பினரிடமும் கைரேகை எடுத்து பதிவு செய்ய வேண்டும், அனைவருக்கும் கடை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இதில், புதிய சந்தை கட்டுவதற்கு திட்ட வரைவு செயல்படுத்தப்பட்ட பின்னர், அனைத்து வியாபாரிகளிடமும் காண்பித்த பிறகு செயல்படுத்தப்படும் என மண்டல அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண் மீன் வியாபாரிகள் அங்கிருந்து கலைந்துச் சென்றுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரிகள் பேட்டி (ETV Bharat TamilNadu)

இது தொடர்பாக திருவொற்றியூர் சந்தை மீன் வியாபாரம் செய்து வரும் கிரிஜா என்பவர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, “நான் கடந்த 14 வருடமாக இங்கு மீன் வியாபாரம் செய்து வருகிறேன். இந்நிலையில், இப்பகுதியில் புதிய சந்தை அமைக்கவுள்ளதாக கூறி அதிகாரிகள் கெயெழுத்து வாங்கினர். ஆனால், இங்கு வியாபாரம் செய்யும் அனைத்து நபர்களிடமும் கெயெழுத்து வாங்காமல், குறிபிட்ட சில பேரிடம் மட்டுமே கையெழுத்து பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க:நட்சத்திர ஆமைகளுடன் சிக்கிய இந்தியருக்கு சிங்கப்பூரில் 16 மாதம் சிறை..!

இது குறித்து கேட்டதற்கு, எங்களிடம் பட்டியல் உள்ளது, அதன்படி நடவடிக்கை எடுக்கிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, இங்கிருந்த கடைகள் இடித்துவிட்டு, மருத்துவமனை கட்டப்பட்டதால் அங்குள்ள கடைகளை தற்போது சாலையில் போட்டு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். எங்களுக்கும் அதே நிலைமை ஏற்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து மீன் வியாபாரம் செய்யும் கோமதி என்பவர் கூறுகையில், ”40 வருடமாக மீன் சந்தையில் மீன் வியாபாரம் செய்து வருகிறேன். சந்தைஅத்தியாவசிய தேவைகள் போதுமான வகையில் இல்லாததாலும், கட்டடங்கள் பழுதடைந்து இருந்ததாலும் புதிய கட்டடங்களை கட்டித் தர கோரிக்கை வைத்தோம். அதன்படி, எங்களுக்கு புதிய கடைகளை கட்டி தர மாநகராட்சியினர் அனுமதி அளித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று வந்த அதிகாரிகள் 70 கடைகள் மட்டுமே மீன் கடைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த சந்தையில் சுமார் 120 கடைகள் அமைத்து நாங்கள் வியாபாரம் செய்து வருகிறோம். கடைகளுக்கான ரசீது கொடுத்து எங்களுக்கான கடையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:இலங்கையின் பிடியில் உள்ள தமிழக மீனவர்கள் எண்ணிக்கை.... மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம்!

இது குறித்து அதிமுக 7 ஆவது வார்டு கவுன்சிலர் கே.கார்த்திகேயன் கூறுகையில், “திருவொற்றியூர் பட்டினத்தார் சந்தையில் சுமார் 54 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். சந்தையில் புதிய கட்டடம் கட்டுவதற்கு ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. நவீனமயமாக கட்டப்பட்டிருக்கும் சந்தையில் முறையாக அனைவருக்கும் கடைகள் வழங்க வேண்டும்.

திட்டத்திற்கான வரைபடம் வந்தவுடன் அதனை எங்களிடம் காண்பித்த பிறகு மீன் வியாபாரிகளுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பின்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நாங்கள் திட்டத்தை எதிர்க்கவில்லை, திட்டத்தை முறையாக செயல்படுத்தினால் எங்களுக்கும் மகிழ்ச்சி,” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details